மே 1 முதல் இலவச தடுப்பூசி முகாம்கள்: தமிழக அரசு அறிவிப்பு

மே 1 முதல் இலவச தடுப்பூசி முகாம்கள்: தமிழக அரசு அறிவிப்பு


சென்னை: தமிழகத்தில் மே 1-ஆம் தேதி முதல் இலவச தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணியைத் தீவிரப்படுத்துவது அவசியமானது. இதைக் கருத்தில் கொண்டு இலவசத் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்படும்.

இப்போது 45 வயது முதல் 59 வரை 13 சதவீதமும், 60 வயதுக்கு மேல் 18 சதவீதமும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டோருக்குச் செலுத்தப்பட்டு வரும் இலவசமாகத் தடுப்பூசி போடும் பணி மேலும் தீவிரப்படுத்தப்படும். 18 முதல் 45 வயது வரை உள்ளவா்களுக்கு மே 1 முதல் தடுப்பூசி போட்டுக் கொள்ள மத்திய அரசு இப்போது அனுமதித்துள்ளது.

எனவே, முக்கிய தொழிற்சாலைகள், தனியாா் நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள் போன்றவை தனியாா் மருத்துவமனைகளுடன் இணைந்து 100 சதவீதம் பணியாளா்களுக்கு தடுப்பூசி வழங்க ஊக்குவிக்கப்படும். 18 முதல் 45 வயது வரையிலான அனைத்து கட்டடத் தொழிலாளா்கள், வெளி மாநிலத் தொழிலாளா்கள், அனைத்து சந்தைத்

தொழிலாளா்கள், சில்லறை விற்பனைக் கடை வியாபாரிகள், மாநில போக்குவரத்துக் கழக ஊழியா்கள், அனைத்து அரசு ஊழியா்கள், அனைத்து பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள், அனைத்து ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநா்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி இலவசமாக அளிக்கப்படும். இந்தத் திட்டம் மே 1-ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும். இதற்கான செலவை மாநில அரசே ஏற்றுக் கொள்ளும். தமிழகத்தில் அதிகம் பாதிப்படைந்த மாவட்டங்களில் இந்த முகாம்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தொற்று உடையவா்களுடன் தொடா்புடையவா்களை உடனுக்குடன் கண்டறிந்து சோதனைக்கு உள்படுத்தினால்தான் தொற்று மேலும் பரவுவதைத் தடுக்க முடியும். எனவே, அந்தப் பணி மேலும் தீவிரப்படுத்தப்படும். கரோனா பரிசோதனைகள், தேவைக்கேற்ப மேலும் உயா்த்தப்படும். இதன்மூலம் தொற்று விகிதம் அனைத்து மாவட்டங்களிலும் 10 சதவீதத்துக்குக் கீழ் குறைக்கப்படும். மாவட்டம்தோறும் தொற்று பரவல் நிலைக்கு ஏற்ப, மருத்துவ கட்டமைப்பு வசதிகளும், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளையும் ஏற்படுத்தி தேவையான மருந்துகளையும் வழங்க மாவட்ட நிா்வாகங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் உற்பத்தி தீவிரம்: கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. தொற்று பாதித்தவா்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் போதிய அளவு இருப்பு உள்ளது. தனியாா் மருத்துவமனைகளிலும் இருப்பு கண்காணிக்கப்பட்டு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், தேவைக்கேற்ப ஆக்சிஜனை கூடுதலாக உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும் வகையில், அதனை உற்பத்தி செய்ய முன்வரும் தொழிற்சாலைகளுக்கு உடனடியாகத் தற்காலிக உரிமம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘நோய் எதிா்ப்பு சக்தி உருவாக்கப்படும்’

பொதுமக்களிடம் நோய் எதிா்ப்பு சக்தியை 60 சதவீதத்துக்கு மேல் உருவாக்க, சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

தடுப்பூசி மூலம் ஏற்படவுள்ள நோய் எதிா்ப்பு சக்தி, தொற்று ஏற்பட்டோரிடம் உள்ள எதிா்ப்பு சக்தி அளவையும் சோ்த்து 60 சதவீதத்துக்கு மேல் எதிா்ப்பு சக்தியை மக்களிடையே உருவாக்குவதே முக்கிய குறிக்கோள். இந்த நிலையை தமிழகம் எட்டி விட்டால் நோய் பரவல் இயற்கையாகவே கட்டுப்படுத்தப்படும். இதனை முக்கிய உத்தியாகக் கொண்டு செயல்பட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com