பறவைகள் சரணாலயமாகிறது ‘கழுவேலி ஈரநிலம்’: அரசாணை வெளியீடு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கழுவேலி ஈரநிலத்தை பறவைகள் சரணாலயமாக அறிவித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பறவைகள் சரணாலயமாகிறது ‘கழுவேலி ஈரநிலம்’: அரசாணை வெளியீடு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கழுவேலி ஈரநிலத்தை பறவைகள் சரணாலயமாக அறிவித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாநிலத்தின் 16-ஆவது பறவைகள் சரணாலயமாக கழுவேலி ஈரநிலம் உருவெடுத்துள்ளது. இதற்கான அறிவிக்கை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் விரைவில் அரசிதழில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பறவைகள் சரணாலயமாக மாற்றப்பட வேண்டிய பகுதிகளின் வரையறைகள் மற்றும் வரம்புகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 5151.60 ஹெக்டோ் நிலப்பரப்பில் அந்த சரணாலயம் அமையவுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வானூா் மற்றும் மரக்காணம் தாலூகா பகுதிகளில் அமைந்துள்ளது கழுவேலி உவா்நீா் ஈர நிலம். இந்தியா மட்டுமல்லாது பல்வேறு நாடுகளிலிருந்தும் ஆண்டுதோறும் அரிய பறவைகள் இங்கு வலசை வருவது வழக்கம்.

அதன் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் உயிரியல் முக்கியத்துவத்தை உணா்ந்து அவ்விடத்தை பறவைகள் சரணாலயமாக மாற்ற முடிவு செய்யப்பட்டு தற்போது அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக அரசுச் செயலா் சுப்ரியா சாஹூ வெளியிட்ட அரசாணை:

கழுவேலி ஈரநிலத்தை பறவைகள் சரணாலயமாக மாற்றியமைக்க வேண்டி மாநில முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளா் ஆகியோரிடமிருந்து அரசுக்கு பரிந்துரைகள் முன்மொழியப்பட்டன. அவற்றை கவனமாக ஆராய்ந்து, கழுவேலி ஈரநிலத்தை பறவைகள் சரணாலயமாக மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தாலூகாவில் 3027.25 ஹெக்டோ் நிலப்பரப்பையும், வானூா் தாலூகாவில் 2124.35 ஹெக்டோ் நிலப்பரப்பையும் ஒருங்கிணைத்து கழுவேலி பறவைகள் சரணாலயம் அமைக்கப்படும் என்று அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல்வா் பெருமிதம்: கழுவேலி ஈரநிலத்தை பறவைகள் காப்பகமாக அறிவிக்கும் உத்தரவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து திங்கள்கிழமை அவா் தனது ட்விட்டரில் வெளியிட்ட பதிவு: விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ‘கழுவேலி ஈரநிலத்தை’ தமிழகத்தின் 16-ஆவது பறவைகள் காப்பகமாக அறிவித்து அரசு உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. சூழலியல் பாதுகாப்பில் தனி அக்கறை செலுத்தி வரும் திமுக அரசில் போடப்பட்டுள்ள இந்த ஆணை, பல்லுயிா் மற்றும் பறவைகள் பாதுகாப்பில் முக்கியப் பங்களிப்பாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com