ஆட்சியில் பங்கு தரும் கட்சியுடன் கூட்டணி: டாக்டர் கிருஷ்ணசாமி

ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரும் கட்சியுடன் மட்டுமே இனி கூட்டணி வைக்கப்படும் என்றார் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர், தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.
ஆட்சியில் பங்கு தரும் கட்சியுடன் கூட்டணி: டாக்டர் கிருஷ்ணசாமி
ஆட்சியில் பங்கு தரும் கட்சியுடன் கூட்டணி: டாக்டர் கிருஷ்ணசாமி


கடையநல்லூர்: ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரும் கட்சியுடன் மட்டுமே இனி கூட்டணி வைக்கப்படும் என்றார் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர், தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.

தென்காசி மாவட்ட புதிய தமிழகம் கட்சி சார்பில் "தமிழக வளர்ச்சி அரசியல் மாநாடு" கடையநல்லூர் அருகே உள்ள குமந்தாபுரத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். இளைஞரணி தலைவர் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி, மாவட்ட செயலர்கள் சுப்பிரமணியன், ராஜேந்திரன், இணைச் செயலர் செல்வராஜ், துணை செயலர் குமார், மாவட்ட இளைஞரணி செயலர் ராஜா, தொகுதி செயலர் மகேஷ்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி வடக்கு மாவட்ட செயலர் இன்பராஜ் வரவேற்றார்.

மாநாட்டில், பட்டியல் இனத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்பதற்கான காரணங்களைப் பட்டியலிட்டு டாக்டர் கிருஷ்ணசாமி பேசியது,  உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். தேவேந்திரகுல வேளாளர் இனத்தை பட்டியல் இனத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி நாம் நடத்திய பலக்கட்ட போராட்டங்களின் விளைவாக மத்திய அரசு தற்போது உள்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என பெயர் மாற்றம் செய்வதற்கான மசோதாவை கொண்டுவந்துள்ளது. ஆனால் இது மட்டுமல்ல நமது கோரிக்கை. முழுமையாக தேவேந்திர குல வேளாளர் இனத்தைப் பட்டியலில் இருந்து வெளியேற்ற வேண்டும்.

அது தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்படக் கூடிய நிலையில் தேவேந்திரகுல வேளாளர் இனத்தை பட்டியலில் இருந்து நீக்கி மசோதா தாக்கல் செய்தால் மட்டுமே எங்கள் சமூகத்தின் ஒட்டுமொத்த வாக்குகளும் உங்களுக்கு கிடைக்கும். இல்லையெனில் நாங்கள் தொடர்ந்து போராட வேண்டிய நிலை உருவாகும்.

புதிய தமிழகம் கட்சி எந்தத் தேர்தலிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததில்லை. மற்ற கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஊழலை தொடங்கி வைக்கின்றனர். புதிய தமிழகம் கட்சி போல் மற்ற கட்சிகளும் தேர்தலை எதிர் கொண்டால் ஊழலற்ற நாடாக நம் நாடு மாறிவிடும். 

புதிய தமிழகம் என்று ஆட்சி அதிகாரத்தில் அமர்கிறதோ அன்று தான் தமிழகம் வளர்ச்சி அடையும். அதற்கு நாம் ஜாதி, மதங்களைக் கடந்து அனைவருக்குமான வளர்ச்சிக்கு உதவ வேண்டும். ஆற்றின் கரைகளில் நிலத்தை சீர்படுத்தி வேளாண்மை செய்த மூத்த தமிழ் இனம் நமது இனம். ஆனால் வரலாறு மறைக்கப்பட்டு விட்டது. இன்னும் சொல்லப்போனால் இந்த நாட்டை ஆண்ட சேர, சோழ, பாண்டியர்களின் கருவறைகளாக இருந்தவர்கள் நாம்.

இந்து என்னும் பூர்விக அடையாளத்தை நாம் ஒரு போதும் இழந்து விடக் கூடாது. ஜாதி பாகுபாடு காரணமாக யாரும் மதம் மாறவில்லை. இந்து என்னும் அடையாளத்தை சிதைத்து விட்டு நமது ஒற்றுமை சிதைந்து போனால் அந்நிய நாடுகளுக்கு அது வசதியாக போய்விடும். இந்துக்களின் ஒற்றுமை தான் இந்தியாவின் ஒற்றுமை. யாரும் ஜாதி பாகுபாட்டிற்காக மதம் மாறுவதை தவிர்க்க வேண்டும்.

கடந்த காலங்களில் சில இடங்களுக்காக அவசரப்பட்டு கூட்டணி வைத்து தவறிழைத்து விட்டோம் .நமக்கு அமைந்த கூட்டணிகள் நேர்மையான கூட்டணி இல்லை. நம்முடைய வாக்குகளை அவர்கள் பெற்று வெற்றி பெற்றார்கள். அதே சமயம் நமக்கு ஆதரவாக அந்த கட்சிகளின் மாவட்டச் செயலர்கள் கூட வாக்கு சேகரிக்க வரவில்லை.

இனி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும். இல்லையென்றால் தனித்துப் போட்டியிடுவோம். நமது தலைமையை விரும்பும் கட்சிகளுடன் இணைந்து தமிழக வளர்ச்சிக்கு பாதை அமைப்போம்.

மத்திய, மாநில அரசுகள் பட்டியல் இனத்தில் இருந்து தேவேந்திரகுல வேளாளர் இனத்தை நீக்க வேண்டும். அதன்பின் தேவேந்திரகுல வேளாளர்களுக்கு என புதிய தனிப்பிரிவை உருவாக்கி கொடுக்க வேண்டும் .அப்படி செய்தால் தான் எங்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

பிரச்னைகளுக்கு நூறு நாளில் தீர்வு தருவேன் என ஒருவர் பிரசாரம் செய்து வருகிறார். நூறு நாளில் எந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியும்?. இதையெல்லாம் நம்பாதீர்கள். திருக்குறளுக்கு பொருள் எழுதிய கருணாநிதியால் நமது உண்மையான வரலாற்றை எழுத முடியவில்லை என்றார் டாக்டர் கிருஷ்ணசாமி.

புளியங்குடியில் நகரச் செயலர் சாமிதுரை, மாவட்ட தகவல் தொடர்பு செயலர் தேவேந்திரன், மாணவரணி செயலர் வில்சன், விவசாய அணி செயலர் பால்ராஜ், ஒன்றிய செயலர்கள் முருகன், காசிப்பாண்டியன் உள்ளிட்டோர் பேசினர். நகர செயலர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com