சிவப்பு நட்சத்திரம் உதிர்ந்தது! தா.பாண்டியன் மறைவுக்கு தொல்.திருமாவளவன் இரங்கல்

தா.பாண்டியன் மறைவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சிவப்பு நட்சத்திரம் உதிர்ந்தது! தா.பாண்டியன் மறைவுக்கு தொல்.திருமாவளவன் இரங்கல்

தா.பாண்டியன் மறைவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் தா.பாண்டியனின் மறைவு பெருந்துயரத்தை அளிக்கிறது. இந்திய பொதுவுடைமை அரசியல் வானில் சுடர்விட்டு ஒளிர்ந்த சிவப்பு நட்சத்திரங்களில் ஒன்று உதிர்ந்தது. சமத்துவ அரசியலின் செஞ்சுடர் அணைந்தது.

மறைந்த தோழர் தா.பாவுக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது வீர வணக்கத்தைச் செலுத்துகிறோம்!

தோழர் ஜீவாவின் வழியொற்றி பொதுவுடமை இயக்கக் கருத்துகளை அழகு தமிழில் எளிய மக்களுக்குக் கொண்டு சேர்த்தவர் தோழர் தா.பா ஆவார். ஆங்கிலப் பேராசிரியராக வகித்த பதவியை உதறி எறிந்து பொதுவுடைமை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். இரண்டு முறை  நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு உழைக்கும் மக்களின் பிரச்னைகளை முன்வைத்து வாதாடியவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக 15 ஆண்டுகாலம் பொறுப்பு வகித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கு உழைத்தவர். ஆங்கிலத்திலும் தமிழிலும் ஆழ்ந்த புலமை கொண்டவர். எழுத்தாற்றல் பேச்சாற்றல் உள்ளிட்ட பன்முகத் திறமைகளைப் பெற்றவராகத் திகழ்ந்தவர். ஈழத்தமிழர் நலன்களில் இதயபூர்வமான அக்கறைகொண்டு உழைத்தவர்.

90 ஆவது அகவையைத் தொட இருந்த சூழலில் அவரை இயற்கை நம்மிடமிருந்து பறித்துக் கொண்டு விட்டது. மறைவெய்தும்வரை சிந்தனை திறன் குறையாமல், தெளிந்த நீரோடை போன்ற தனது பேச்சு வன்மை சற்றும் குறைவு படாமல், தான் என்றும் பொதுவுடமை இயக்கத்தின் ஊழியன் தான் என்பதை உலகுக்கு உணர்த்திய அவர் இன்று நம்மிடமிருந்து விடை பெற்றுவிட்டார். அவரது தறைவு, பொதுவுடமை இயக்கத்துக்கு மட்டுமன்றி உழைக்கும் வர்க்கத்திற்கும் உழைக்கும்  மக்களுக்காகப் பாடாற்றும் அனைத்து அரசியல் சக்திகளுக்கும் நேர்ந்த பேரிழப்பாகும்.

உழைக்கும் மக்களின் ஒற்றுமைக்காகவும் அவர்களின் மீட்சிக்காகவும், சாதி, மத அடையாளங்களைக் கடந்து பொதுவுடமை இலட்சியத்தோடு பாடாற்றி மறைந்திருக்கின்ற தோழர் தா.பா அவர்களை இழந்து வாடுவோர் யாவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்! இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com