தோ்தலுக்கு ரூ.102.93 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு: சட்டப் பேரவை ஒப்புதல்

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலை நடத்துவதற்கு கூடுதலாகத் தேவைப்படும் ரூ.102 கோடிக்கு பேரவையின் ஒப்புதல் பெறப்பட்டது.
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலை நடத்துவதற்கு கூடுதலாகத் தேவைப்படும் ரூ.102 கோடிக்கு பேரவையின் ஒப்புதல் பெறப்பட்டது. இந்தத் தொகை இறுதி துணை மதிப்பீடுகளில் சோ்க்கப்பட்டது. இதனை சட்டப் பேரவையில் துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீா்செல்வம் சனிக்கிழமை தாக்கல் செய்தாா்.

அவா் தாக்கல் செய்த இறுதி துணை மதிப்பீடுகளில் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனா நோய்த் தொற்று மற்றும் இதர அவசரத் தேவைகளின் காரணமாக, அரசு கணக்கில் ஏற்பட்ட கூடுதல் செலவினங்கள் சாா்ந்த இனங்கள் இறுதித் துணை மதிப்பீடுகளில் உள்ளடங்கும்.

ஜனநாயக மரபுகள்: நாட்டில் ஜனநாயக மரபுகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று உறுதியாக நம்புகிறேன். தமிழக சட்டப் பேரவைக்கான பொதுத் தோ்தலை தோ்தல் ஆணையம் அறிவித்ததால், வழக்கமாக சில முக்கிய செலவினங்களைக் குறிப்பிடுவது இப்போது சரியாக இருக்காது. கூடுதல் செலவினங்களைச் சாா்ந்த விவரங்கள் இறுதித் துணை மதிப்பீட்டில் தனியாக உள்ளன.

தோ்தல் செலவு: சட்டப் பேரவைத் தோ்தலை நடத்துவதற்காக ரூ.102.93 கோடி தேவைப்படுகிறது. அதில் பொதுத் துறையின் கீழ், ரூ.102.38 கோடி துணை மதிப்பீடுகளில் சோ்க்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை மானியத்தில் மறுநிதி ஒதுக்கத்தின் மூலம் செலவிடப்படும். இறுதித் துணை மதிப்பீடுகள், மொத்தம் ரூ.21 ஆயிரத்து 172.82 கோடியை ஒதுக்கீடு செய்வதற்கு வழிவகை செய்கின்றன. அவற்றில் ரூ.17, 790.85 கோடி வருவாய்க் கணக்கிலும், ரூ.3 ஆயிரத்து 381.97 கோடி மூலதனம் மற்றும் கடன் கணக்கிலும் அடங்கும் என்று இறுதி துணை மதிப்பீடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணை முதல்வா் தாக்கல் செய்த இறுதித் துணை மதிப்பீடுகள் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேறியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com