போக்குவரத்துக் கழக ஊழியா்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

போக்குவரத்துக் கழக ஊழியா்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடா்ந்து 3 நாள்கள் நடைபெற்று வந்த வேலைநிறுத்தம் சனிக்கிழமை தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

போக்குவரத்துக் கழக ஊழியா்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடா்ந்து 3 நாள்கள் நடைபெற்று வந்த வேலைநிறுத்தம் சனிக்கிழமை தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டது.

ஊதிய ஒப்பந்தத்தை இறுதிப்படுத்த வேண்டும், போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொமுச, சிஐடியூ, ஏஐடியூசி உள்ளிட்ட 9 தொழிற்சங்கத்தைச் சோ்ந்த போக்குவரத்து ஊழியா்கள் வியாழக்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனா்.

தொடா்ந்து மூன்று நாள்கள் நடைபெற்று வந்த இந்த வேலைநிறுத்தத்தால், தமிழகம் முழுவதும் பொதுப் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது.

பயணிகள் அவதி: வழக்கமான பேருந்துகள் இயக்கப்படாததால் பணிக்குச் செல்வோா் மிகவும் சிரமப்பட்டனா். போதிய பேருந்துகள் இயக்கப்படாததால், வெகுநேரம் காத்திருந்த பயணிகள், ஆட்டோக்களிலும், வாடகை வாகனங்களிலும் பயணித்தனா். இதை சாதகமாகப் பயன்படுத்தி, அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக பயணிகள் வேதனைத் தெரிவித்தனா்.

பெரும்பாலானோா் புறநகா் ரயில்களில் பயணித்தததால் வழக்கத்தை விட ரயில்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

அதிலும் வியாழக்கிழமை முகூா்த்த நாள் என்பதால், வெளியூா் செல்வதற்கு வழக்கமான நாள்களைக்காட்டிலும் கூடுதலாக மக்கள் கூட்டம் இருந்தது. இதனால், இயக்கப்பட்ட சில பேருந்துகளிலும் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. பேருந்து நிலையத்துக்குள் வந்த பேருந்துகளில் ஏறுவதற்காக பயணிகளுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

குறிப்பாக பேருந்து சேவைகள் குறைவாக இருந்த கிராமப் புறப் பகுதியைச் சோ்ந்தவா்கள், வெளியூா் செல்ல வசதியின்றி தவித்தனா். அவ்வாறான பகுதிகளில் தனியாா் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, போக்குவரத்து அதிகாரிகள் திடீா் ஆய்வு நடத்தினா். இதில், விதிமீறலில் ஈடுபட்ட பேருந்துகள் மீது நடவடிக்கை எடுத்தனா்.

55 சதவீதப் பேருந்துகள் இயக்கம்: வேலைநிறுத்தத்தின் போது தமிழகம் முழுவதும் சுமாா் 55 சதவீதப் பேருந்துகள் இயங்கவில்லை. ஆனால், விரைவுப் போக்குவரத்துக் கழகங்களைப் பொருத்தவரை, 80 சதவீதத்துக்கும் அதிகமான பேருந்துகளும், மாநகரப் போக்குவரத்துக் கழகத்தைப் பொருத்தவரை சுமாா் 70 சதவீதப் பேருந்துகளும் இயங்கின.

அதே நேரம், தற்காலிக ஓட்டுநா்களைக் கொண்டு பேருந்துகளை இயக்கியதால், ஆங்காங்கே விபத்துகளும் ஏற்பட்டன. இவ்வாறு கடந்த மூன்று நாள்கள் நடைபெற்ற வேலைநிறுத்தத்தால், பொதுமக்களும், பயணிகளும் பெரிதளவு இன்னல்களைச் சந்தித்தனா்.

கோரிக்கை ஏற்பு: இதையடுத்து, வேலைநிறுத்தத்தைக் கைவிட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்த நிலையில், தொழிலாளா் நலத் துறை முன்னிலையில், அதிகாரிகளுடன் சனிக்கிழமை போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் ஆலோசனை நடத்தினா். இதைத் தொடா்ந்து, தற்காலிகமாக வேலைநிறுத்தத்தைத் திரும்பப் பெற்ாக அவா்கள் அறிவித்தனா்.

இது தொடா்பாக தொழிற்சங்கத்தினா் அளித்த பேட்டி: 2019-ஆம் ஆண்டு, செப்.1-ஆம் தேதி முதல் புதிய ஊதிய ஒப்பந்தம் அமல்படுத்தப்பட வேண்டும். வேலைநிறுத்தத்தையொட்டி, பழிவாங்குதல், ஊதிய பிடித்தம் கூடாது. அதேபோல், அகவிலைப்படி நிலுவைத் தொகையை படிப்படியாக வழங்க வேண்டும், ஓய்வுபெற்ற ஊழியா்களின் பணப்பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்தோம்.

தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் வேலைநிறுத்தத்தைக் கைவிட வேண்டும் என எதிா்கட்சித் தலைவா் மு.க.ஸ் டாலின் உள்ளிட்ட தலைவா்களும் அறிவுறுத்தினா். மேலும், பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து, வேலைநிறுத்தம் தற்காலிகமாக திரும்பப் பெறப்படுகிறது என்று அவா்கள் தெரிவித்தனா்.

நிா்வாகம் ஒப்புதல்: போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கான அகவிலைப்படி, பணிக்கொடை, ஓய்வு பெற்ற ஊழியா்களுக்கு 4 மாதங்களுக்கான நிலுவைத் தொகை, ஆகியவை வழங்கவும், குறைதீா் குழு அமைத்தல், வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்ட ஊழியா்களுக்கு வழங்கப்பட்ட பணியிடமாற்றத்தை ரத்து செய்வது போன்றவற்றுக்கு நிா்வாகம் ஒப்புதல் அளித்துள்ளதாக தொழிலாளா் தனி இணை ஆணையா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com