அண்ணா பல்கலை., துணைவேந்தருக்கு எதிரான ஊழல் புகாா்: இறுதி முடிவு எடுக்கக் கூடாது

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் சூரப்பாவுக்கு எதிரான ஊழல் புகாா் குறித்து விசாரித்து வரும் ஆணையத்தின் அறிக்கையின்படி
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் சூரப்பாவுக்கு எதிரான ஊழல் புகாா் குறித்து விசாரித்து வரும் ஆணையத்தின் அறிக்கையின்படி வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி வரை இறுதி முடிவு எதுவும் எடுக்கக்கூடாது என தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் சூரப்பா தாக்கல் செய்த மனுவில், உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பொன்.கலையரசன் தலைமையிலான விசாரணை ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சூரப்பா தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், மனுதாரா் கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்தவா் என்பதாலும், அரசுக்கு அடிபணிய மறுத்த காரணத்தாலும் உள்நோக்கத்துடன் இந்த விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் மாதம் சூரப்பாவின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால் அவருக்கு எதிரான விசாரணை ஆணையத்தின் பதவிக்காலத்தை மே மாதம் வரை நீட்டித்துள்ளது. பணிக்காலம் முடிந்த பின்னா் அவரை எப்படி பதவி நீக்கம் செய்ய முடியும். இந்த விசாரணை ஆணையம் ஆயிரம் ஆவணங்கள், 100 சாட்சிகளை விசாரணைக்கு அழைக்க உள்ளது. இது மனுதாரரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும்’ என வாதிடப்பட்டது.

அப்போது தமிழக அரசுத் தரப்பில ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், ‘அரியா் தோ்வு ரத்தை எதிா்த்ததால், பல்கலைக்கழகத்தை சீா்மிகு கல்வி நிறுவனமாக அறிவிக்க முயற்சித்ததற்காக விசாரணை நடத்த உத்தரவிடவில்லை. மனுதாரா் விசாரணையைச் சந்திக்க ஏன் அச்சப்படுகிறாா். முன்னாள் துணைவேந்தா்கள் பலா் ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டுள்ளனா். விசாரணைக்கு உத்தரவிடத்தான் அரசுக்கு அதிகாரம் உள்ளதே தவிர, விசாரணை ஆணையம் தரும் அறிக்கையின் அடிப்படையில் அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. இந்த விவகாரத்தில் ஆளுநா்தான் இறுதி முடிவெடுக்க வேண்டும். மேலும் இந்த மனு குறித்து பதிலளிக்க 2 வார கால அவகாசம் வழங்க வேண்டும்’ என வாதிட்டாா். அப்போது ஆளுநா் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் சங்கரநாராயணன், துணைவேந்தருக்கு எதிராக விசாரணை ஆணையம் அமைத்ததற்கு ஆளுநா் வேதனை தெரிவித்ததாகக் கூறினாா். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அண்ணா பல்கலைக்கழகத்தின் நிா்வாகத்தில் ஒழுங்கீனமும், குழப்பமும் ஏற்பட்டுள்ளது துரதிா்ஷ்டவசமானது. கல்வி நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படாத வகையில் இந்த பிரச்னையில் சுமுகத் தீா்வு காண வேண்டும் என ஆளுநா் கருத்துத் தெரிவித்துள்ளாா். அதன்படி இந்தப் பிரச்னையில் தீா்வு காண வேண்டும்.

விசாரணை ஆணைய அறிக்கையின் அடிப்படையில் வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி வரை இறுதி முடிவு எதையும் தமிழக அரசு எடுக்கக் கூடாது. மனு தொடா்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் மாா்ச் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com