மணப்பாறையில் அழுகிய பயிர்களுடன் வேளாண் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

மணப்பாறையில் கடந்த சில நாள்களாக பெய்து வந்த தொடர் மழை காரணமாக சுமார் 2 ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்பளவில் நெல், உளுந்து, வெங்காயம் மற்றும் பூக்கள் முழுவதும் மழை நீரில் மூழ்கி அழுகியது. 
வேளாண் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
வேளாண் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் கடந்த சில நாள்களாக பெய்து வந்த தொடர் மழை காரணமாக சுமார் 2 ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்பளவில் நெல், உளுந்து, வெங்காயம் மற்றும் பூக்கள் முழுவதும் மழை நீரில் மூழ்கி அழுகியது. 

இதுதொடர்பாக இப்பகுதி விவசாயிகள், முறையான கணக்கீடு செய்து உழவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதற்கான போராட்டங்களும் நடைபெற்றது. இந்நிலையில் நெற்பயிர்கள் இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கிட வேண்டும், வருவாய்த்துறையினர் தங்களது அலட்சியப்போக்கினை கைவிட்டு கணக்கீடு செய்யக் களத்திற்கு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் மற்றும் ஒன்றிய செயலாளர் கண்ணுச்சாமி ஆகியோர் தலைமையில், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தினை அழுகிய நெற்பயிர்களைக் கையில் ஏந்தி முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது அங்கு வந்த ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரியும், தேசிய உணவு பாதுகாப்பு ஆலோசகருமான சந்தானகிருஷ்ணன் விவசாயிகளிடம் சமரசம் பேசினார். வேளாண் உதவி இயக்குனர் விநாயகமூர்த்தி அருகில் இருந்த நிலையில், ஓய்வுபெற்ற அதிகாரி சமரசம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதனைத்தொடர்ந்து வருவாய் வட்டாட்சியர் லஜபதிராஜ் தலைமையிலான வருவாய்த்துறையினர், காவல் ஆய்வாளர் அன்பழகன் தலைமையிலான போலீஸார் ஆகியோர் சமரசம் செய்தும் அதை ஏற்கொள்ளாத விவசாயிகள் ஸ்ரீரங்கம் உதவி ஆட்சியர் நிகழ்விடத்துக்கு வரவேண்டும் என்றும், பேச்சுவார்த்தைக்கு முறையான அதிகாரிகள் வராததைக் கண்டித்தும், அரை நிர்வாணத்துடன் சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டனர். 

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com