தூய தமிழ் ஊடக விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு தகவல்

தூய தமிழ் ஊடக விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு தகவல்

தூய தமிழ் ஊடக விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசின் அகரமுதலித் திட்ட இயக்ககம் தெரிவித்துள்ளது.

தூய தமிழ் ஊடக விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசின் அகரமுதலித் திட்ட இயக்ககம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : அன்றாடம் மக்களின் வாழ்வியலுக்குத் தேவையான செய்திகளை முன்னறிந்து கொடுக்கும் செம்மாந்த பணிகளைச் சிறப்புடன் செய்து வருகின்ற காட்சி, அச்சு ஊடகங்கள் மொழிக்காப்பிலும் முக்கியப் பங்காற்றுகின்றன.

ஊடக மொழியே உலகமொழியாகிவிட்ட இன்றைய நிலையில், காட்சி மற்றும் அச்சு ஊடகங்களின் உதவியோடுதான் நல்ல தமிழ்ச் சொற்களையும் காலத்துக்கு ஏற்ற புதிய தமிழ்க் கலைச்சொற்களையும் புழங்குமொழியாக்க முடியும்.

மொழிக்கலப்பைத் தவிா்த்தலே தமிழ்மொழியைக் காப்பதற்கும் வளப்படுத்துவதற்குமான அடிப்படையாகும். எனவே, தூய தமிழைப் பயன்படுத்தும் காட்சி ஊடகங்களையும், அச்சு ஊடகங்களையும் பாராட்டி ஊக்கமளிக்கும் வகையில், ‘தூய தமிழ் ஊடக விருதினை’ தமிழக அரசு அறிவித்துள்ளது.

தூயதமிழ்ச் சொற்களையும், காலத்திற்கேற்ற புதிய கலைச்சொற்களையும் பயன்படுத்தி மக்களுக்குச் செய்திகளை வழங்கும் ஒரு காட்சி ஊடகத்தையும், ஓா் அச்சு ஊடகத்தையும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்ககத்தின் வழியாகத் தோ்வுசெய்து, தமிழ் அகராதியியல் நாள் விழாவின்போது ‘தூய தமிழ் ஊடக விருதும்’ பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். விருதுத் தொகையாக ஓா் ஊடகத்திற்கு ரூ.50,000, தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரைச் சான்றிதழும் வழங்கப்படும்.

விருதுபெறத் தகுதிவாய்ந்த, விருப்பமுள்ள ஊடக நிறுவனம் சொற்குவை.காம் (https://sorkuvai.com) என்ற வலைதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, நிரப்பி 29.01.2021-ஆம் நாளுக்குள் agarathimalar2020@gmail.com முகவரிக்கு அனுப்புவதுடன், தங்கள் நிறுவனம் தூய தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தியதை உறுதிசெய்யும் வகையில் சான்றுகளை இணைத்து, கீழ்க்கண்ட இயக்கக முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ ஜன.29-ஆம் தேதி மாலைக்குள் கிடைக்குமாறு அனுப்பிவைக்க வேண்டும்.

இயக்கக முகவரி : இயக்குநா், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், நகா் நிருவாக அலுவலக வளாகம், முதல் தளம், எண். 75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆா்.சி. நகா், சென்னை - 600 028.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com