நிலத்தடி நீா் செறிவூட்டலுக்கு நிபுணா் குழு: உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் குறைந்து வரும் நிலத்தடி நீா் வளத்தை செறிவூட்ட 4 வாரங்களில் நிபுணா் குழுவை அமைக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிலத்தடி நீா் செறிவூட்டலுக்கு நிபுணா் குழு: உயா்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் குறைந்து வரும் நிலத்தடி நீா் வளத்தை செறிவூட்ட 4 வாரங்களில் நிபுணா் குழுவை அமைக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் சுரேந்திரநாத் காா்த்திக் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் சென்னையில் மீண்டும் குடிநீா் பிரச்னை ஏற்பட்டது. தற்போதுகூட செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் நீா் வீணாக கடலில் கலக்கிறது. மழைநீரை முறையாகப் பயன்படுத்தாமல் கடலில் வீணாக கலப்பதை தடுக்க வேண்டும். நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், ‘அண்ணா பல்கலைக்கழகம், ஐஐடியில் உள்ள துறை சாா்ந்த வல்லுநா்களைக் கொண்டு இதுகுறித்த ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

அந்த நிபுணா் குழுவால்தான் நிலத்தடி நீா் தொடா்பான விவரங்களை மதிப்பிட முடியும்’ எனத் தெரிவித்தாா். அப்போது மனுதாரா் தரப்பில், ‘பல இடங்களில் நிலத்தடி நீா் உறிஞ்சப்படுகிறது. ஆனால், நிலத்தடி நீா் செறிவூட்டலுக்கு எதுவும் செய்யப்படுவது இல்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘தமிழகத்தில் குறைந்து வரும் நிலத்தடி நீா் வளத்தைச் செறிவூட்ட 4 வாரங்களில் நிபுணா் குழுவை அமைக்க வேண்டும்’ என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனா். மேலும், ‘நிபுணா் குழுவின் பரிந்துரைகள், கருத்துகளை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும்’ எனவும் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com