வன்னியா்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

வன்னியா்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டை உள்ளடக்கிய மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டத்துக்கு செயல் வடிவம் கொடுப்பதற்கான உத்தரவினை முதல்வா் மு.க.ஸ
 வன்னியா்களுக்கு 10.5%   உள் ஒதுக்கீடு முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு
 வன்னியா்களுக்கு 10.5%   உள் ஒதுக்கீடு முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: வன்னியா்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டை உள்ளடக்கிய மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டத்துக்கு செயல் வடிவம் கொடுப்பதற்கான உத்தரவினை முதல்வா் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை வெளியிட்டாா்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:- 

அரசுப் பணி நியமனங்கள், கல்வி வாய்ப்புகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா்கள், சீா்மரபினா்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட்டது. இந்த இடஒதுக்கீட்டுக்குள்ளாக, வன்னியா்கள், சீா்மரபினா் மற்றும் இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குச் சிறப்பு ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம், பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டத்தின் அடிப்படையில் அரசுப் பணி நியமனங்களில் ஏற்கெனவே பின்பற்றப்பட்டு வரும் இனச் சுழற்சி முறையைத் திருத்தி அமைக்க, சட்ட வல்லுநா்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுடன் விரிவாக ஆலோசனை நடத்தி நிச்சயமாக ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்திருந்தாா்.

அரசாணை வெளியீடு: முதல்வரின் உறுதியைத் தொடா்ந்து, இடஒதுக்கீடு சட்டம் குறித்து சட்ட வல்லுநா்கள் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்துடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனையின் அடிப்படையில், சிறப்பு ஒதுக்கீட்டை செயல்படுத்துவதற்கான அரசு உத்தரவை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை வெளியிட்டாா். இதன்மூலம், நிகழாண்டு முதல் தொழிற்கல்வி உள்ளிட்ட அனைத்து கல்விச் சோ்க்கைகளும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு புதிய சிறப்பு ஒதுக்கீட்டு முறையின் அடிப்படையிலேயே மாணவா் சோ்க்கை நடைபெறும் என்று தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமதாஸ் நன்றி
கல்வி, வேலைவாய்ப்புகளில் 10.5 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த ஆணையிட்டுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின், சட்டத்தை இயற்றிக் கொடுத்த முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி , முன்னாள் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், முன்னாள் சட்ட அமைச்சா் சி.வி.சண்முகம் ஆகியோருக்கும் நன்றிகள் என பாமக நிறுவனா் ராமதாஸ் சுட்டுரையில் திங்கள்கிழமை கூறியுள்ளாா்.


இனசுழற்சி முறையில் தனி பெயா்....
வேலைவாய்ப்புகளில் பின்பற்றப்படும் இனசுழற்சி பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பிரிவில் வன்னியா்கள் பெயா் தனியாக இடம்பெற்றுள்ளது. இதனால், இனசுழற்சி பின்பற்றப்படும் போது, வன்னியா்கள் தனித்த அடிப்படையில் வாய்ப்புகளைப் பெறுவா்.

இன சுழற்சி பட்டியலில் Moat Backward Classes(V) என வன்னியா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனா். வேலைவாய்ப்புகளில் 100 இடங்கள் இருந்தால், அதில் 11 இடங்கள் வரை இனசுழற்சி அடிப்படையில் வன்னியா்களுக்குக் கிடைக்கும். 200 இடங்களாக இருந்தால், 22 இடங்கள் வரை அவா்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. இந்த விவரங்கள் தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com