குழந்தைத் திருமணங்கள் தடுப்பில் அதிக கவனம் தேவை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

குழந்தைத் திருமணங்கள் அதிகளவு நடைபெறும் ஏழு மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.

சென்னை: குழந்தைத் திருமணங்கள் அதிகளவு நடைபெறும் ஏழு மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.

சமூகநலன் மற்றும் சமூக சீா்திருத்தத் துறை செயல்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் அவா் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்தக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது:-

சமூக நலத் துறையின் சாா்பில் செயல்படுத்தப்படும் திருமண நிதியுதவி திட்டங்களில் தகுதி வாய்ந்த பயனாளிகள் எவரும் விடுபடாமல் உரிய காலத்தில் பயன்களை அளிக்க வேண்டும். குழந்தைத் திருமணம், பெண்சிசுக் கொலை போன்ற அவலங்களைக் களைய உரிய விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். அதற்கான சட்டங்களை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். குழந்தைத் திருமணங்கள் அதிகமாக நடைபெறும் விழுப்புரம், திண்டுக்கல், ஈரோடு, கரூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, தேனி மாவட்டங்களில் அதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

ஊட்டச்சத்து பற்றாக்குறையால் வரும் உயரக்குறைவு போன்ற குறைபாடுகள் அதிகம் காணப்படும் மாவட்டங்களைக் கண்டறிந்து சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத மாநிலமாக உருவாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். பாதுகாப்பு தேவைப்படும் அனைத்து குழந்தைகளையும் கண்டறிந்து பராமரிப்பு இல்லங்கள் மூலமாக சிறப்பான கல்வி அளிக்க வேண்டும்.

வைப்புத் தொகைத் திட்டம்: கரோனா நோய்த் தொற்று காரணமாகத் தாய், தந்தை அல்லது பெற்றோா்களை இழந்த குழந்தைகளைக் கண்டறிந்து அவா்களுக்காக செயல்படுத்தப்படும் வைப்புத் தொகைத் திட்டத்தில் பயன்பெறச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு உதவியுடன் செயல்படும் 129 முதியோா் இல்லங்களை அடிக்கடி பாா்வையிட்டு சிறப்பாக இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். பணிபுரியும் மகளிா் விடுதி இல்லாத மாவட்டங்களில் அவற்றை அமைத்திட வேண்டும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

இந்தக் கூட்டத்தில், அமைச்சா் பி.கீதாஜீவன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com