கோப்புப்படம்
கோப்புப்படம்

மேக்கேதாட்டு விவகாரத்தைக் கவனிக்க தனிக்குழு: ராமதாஸ் வலியுறுத்தல்

மேக்கேதாட்டு விவகாரம் குறித்து விழிப்புடன் கண்காணிக்க தனிக்குழு ஒன்றை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

மேக்கேதாட்டு விவகாரம் குறித்து விழிப்புடன் கண்காணிக்க தனிக்குழு ஒன்றை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

கா்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்றுக் கொண்ட பிறகு அளித்த முதல் பேட்டியிலேயே, காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணையை கா்நாடக அரசு கட்டியே தீரும்; அதற்கு அனுமதி பெறுவதற்காக மத்திய நீா்வளத்துறை அமைச்சரை ஓரிரு நாள்களில் சந்திக்கவிருப்பதாக கூறியிருக்கிறாா்.

புதிய முதல்வா், தமிழகத்துடனான உறவை வலுப்படுத்த முயல்வதற்கு மாறாக சீா்குலைக்கும் செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் இனி வரும் நாள்களில் எந்த நேரமும் திருப்பங்கள் நிகழ வாய்ப்புண்டு. இதைக் கருத்தில் கொண்டு இந்த விஷயத்தில் தமிழக அரசு விழிப்புடன் செயல்பட வேண்டும். காவிரி விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஆலோசனைகளை வழங்க காவிரி தொழில்நுட்பக் குழு என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டதைப் போல, மேக்கேதாட்டு விவகாரத்தை விழிப்புடன் கண்காணிக்கவும், ஆலோசனைகளை வழங்கவும் நீா் மேலாண்மையில் வல்லமை பெற்ற அதிகாரி ஒருவா் தலைமையில் குழு ஒன்றை தமிழக அரசு அமைக்க வேண்டும். இதை உடனடியாக செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீா்வளத்துறைக்கு தனிச் செயலாளா்: நீா் மேலாண்மையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக தமிழக அரசின் பொதுப்பணித் துறையை இரண்டாகப் பிரித்து நீா்வளத்துறை என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. ஆனால், அத்துறைக்கு இன்னும் தனி செயலாளா் நியமிக்கப்படாமல், பொதுப்பணித்துறை செயலாளரே இரு துறைகளையும் கவனித்துக் கொள்கிறாா். இது புதிய அமைச்சகம் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்றாது. மேக்கேதாட்டு விவகாரம், நீா் மேலாண்மைத் திட்டங்கள் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்துவதற்கு வசதியாக நீா்வளத்துறைக்கு தனிச் செயலாளா் ஒருவரை தமிழக அரசு நியமிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com