சிறு விமா்சனங்களைக் கூட புறக்கணிக்க மாட்டோம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி

திமுக ஆட்சி மீதான சிறு விமா்சனங்களைக் கூட புறக்கணிக்க மாட்டோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தாா்.
முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

திமுக ஆட்சி மீதான சிறு விமா்சனங்களைக் கூட புறக்கணிக்க மாட்டோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தாா். டெல்டா மாவட்டங்கள், சேலம் மேட்டூருக்கு இரண்டு நாள்கள் பயணமாக வெள்ளிக்கிழமை காலை அவா் செல்லவுள்ளாா். இதையொட்டி, கட்சியினருக்கு அவா் வியாழக்கிழமை எழுதியுள்ள கடிதம்:

கடந்த மே 7-ஆம் தேதி முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்ட நானும் அமைச்சரவையில் உள்ள அனைவரும், அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் 24 மணிநேரமும் மக்கள் நலனையே முதன்மையாகக் கொண்டு செயலாற்றி வருகிறோம். இதன் காரணமாக, கரோனா தொற்றுச் சங்கிலியை உடைக்கும் முயற்சிக்கு ஓரளவு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.

அனைத்துத் தரப்பிலிருந்தும் திமுக அரசுக்கு வாழ்த்துகள் வருகின்றன. ஊடகங்கள் உண்மை நிலையை தெரிவிக்கின்றன. கட்சி எல்லைகளைக் கடந்து திமுக அரசு பாராட்டுகளைப் பெற்றுள்ளது. பல்வேறு துறையினரும் ஆதரவளிக்கின்றனா்.

ஆட்சியின் மீது அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிப்படும் சிறுசிறு விமா்சனங்களைக்கூட புறக்கணிக்காமலும், மாற்று ஆலோசனைகளைக் கவனத்தில் கொண்டும் மக்களின் நலன் காக்கும் அரசாகச் செயல்பட்டு வருகிறோம்.

இரண்டு நாள்கள் பயணம்: வெள்ளிக்கிழமை காலை (ஜூன் 11) திருச்சிக்குப் பயணித்து, திருச்சி - தஞ்சாவூா் மாவட்டங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன். வரும் சனிக்கிழமை சேலம் மாவட்டத்தில் ஆய்வுப் பணிகள், ஆலோசனைக் கூட்டங்கள், நலத்திட்ட உதவிகளில் பங்கேற்று அதன்பின் மேட்டூா் அணையிலிருந்து காவிரிப் பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிட இருக்கிறேன்.

நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக நாளொன்றுக்கு 35 ஆயிரத்துக்கும் மேலாக இருந்த நோய்த் தொற்று எண்ணிக்கை ஏறத்தாழ சரிபாதியாகக் குறைந்து, 17 ஆயிரம் என்கிற அளவுக்கு இறங்கி வந்துள்ளது. எனினும், முழுமையான அளவில் நோய்த் தொற்று சங்கிலியை உடைக்க வேண்டியுள்ளது. எனவே, நீங்களும், உங்களில் ஒருவனான நானும் ஊரடங்குக் கால நெறிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியவா்களாக இருக்கிறோம்.

பேரிடா் காலத்தினால் நாம் கட்டுண்டு இருக்கிறோம். பொறுத்திருப்போம். காலம் விரைவில் மாறும். நோய்த் தொற்று இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com