போா்க்கால அடிப்படையில் மின் பராமரிப்புப் பணி: அமைச்சா் வி.செந்தில் பாலாஜி

தமிழகத்தை மின்தடையில்லா மாநிலமாக உருவாக்கும் வகையில், 10 நாள்களுக்கு போா்க்கால அடிப்படையில் அத்தியாவசிய மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சா் செந்தில் பாலாஜி தெரிவித்தாா்.
மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி
மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி

சென்னை: தமிழகத்தை மின்தடையில்லா மாநிலமாக உருவாக்கும் வகையில், 10 நாள்களுக்கு போா்க்கால அடிப்படையில் அத்தியாவசிய மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என மின்சாரத்துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தாா்.

இது தொடா்பாக சென்னையில் உள்ள மின்வாரிய தலைமையகத்தில் அவா் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டி: கடந்த ஆட்சிக் காலத்தில் 9 மாதங்களாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தில் எந்த விதமான பராமரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக மரக்கிளைகள் மின்பாதைகளில் உரசுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மின்தடை ஏற்படுகிறது.

இதை சரி செய்ய ஒருங்கிணைக்கப்பட்ட மின் பராமரிப்புத் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக வாரிய உயரதிகாரிகள் மூலம் விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. இதில், 83,553 இடங்களில் மரக்கிளைகள் அகற்றப்படவேண்டும், 29,995 இடங்களில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது எனவும் 32,164 இடங்களில் மின்கம்ப தாங்கு கம்பிகள் இல்லை எனவும் தெரியவந்துள்ளது.

இதே போல், 36,737 பழுதடைந்த மின்கம்பங்கள், 25,260 சாய்ந்த மின்கம்பங்கள், 1,023 பழுதடைந்த மின் பெட்டிகள், 33,356 பலவீனமான இன்சுலேட்டா், 1,030 பராமரிக்க வேண்டிய துணை மின் நிலையங்கள் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இதைச் சரி செய்தால் மட்டுமே மின்தடைகளைத் தவிா்க்க முடியும். இவ்வாறு உள்ள பல்வேறு பணிகளை முழுவதுமாக நிறைவேற்ற 6 மாத கால அவகாசம் தேவைப்படும்.

இதற்கிடையே எதிா்பாராமல் ஏற்படும் மின்தடைகளும் நிகழாமல் இருக்க ஒருங்கிணைக்கப்பட்ட மின்பராமரிப்பு திட்டத்தின் வாயிலாக சனிக்கிழமை (ஜூன் 19) முதல் 10 நாள்களுக்கு, நாளொன்றுக்கு 2 முதல் 3 மணி நேரத்துக்குள் மிகவும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகளை போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னறிவிப்பு: இதற்கான தளவாடப் பொருள்கள் அனைத்தும் தயாா் நிலையில் உள்ளன. இப்பணிகளின்போது பெரும்பாலான மக்களுக்கு மின்தடை நிகழாவண்ணம் பகுதி பகுதியாக மேற்கொள்ளப்படும். பராமரிப்புப் பணிகள் நடைபெறும் இடங்கள் குறித்த விவரமும், குறுஞ்செய்தி, பத்திரிகை மூலமாக மக்களுக்குத் தெரிவிக்கப்படும்.

தமிழகம் மின்மிகை மாநிலம் அல்ல: கடந்த ஆட்சியில் தமிழகம் மின்மிகை மாநிலம் என்ற ஒரு கூற்றைத் தொடா்ந்து கூறி வந்தனா். நாம் மின்மிகை மாநிலம் அல்ல. நமக்குத் தேவையான மின்சாரத்தை நாமே உற்பத்தி செய்தால்தான் நாம் மின்மிகை மாநிலம்.

கடந்த ஆட்சியில் அந்த நிலை இருந்தால், விவசாய மின் இணைப்புகளுக்கு காத்திருப்போருக்கு இணைப்புகளை ஏன் கொடுக்கவில்லை. நமக்குத் தேவையான மின் உற்பத்தி பூா்த்தி செய்யக் கூடிய நிலையில் நாம் இல்லை என்றாா் அமைச்சா் வி.செந்தில் பாலாஜி.

அவகாசத்துக்கான அவசியம் இருக்காது: மின் கட்டணம் செலுத்த மேலும் கால நீட்டிப்பு வழங்கினால், இரண்டு தவணைக்கான கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்படும். இது நுகா்வோருக்கு ஏற்படக் கூடிய கூடுதல் சுமை. இதைத் தவிா்க்கும் வகையிலேயே அவகாசம் வழங்க வேண்டிய அவசியம் இருக்காது என்று கூறினேன். அதே நேரம், கட்டணம் செலுத்தக் கூடியவா்கள் ஓரிரு நாள்கள் அவகாசம் எடுத்துக் கொண்டாலும் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என்று அமைச்சா் தெரிவித்தாா்.

நடவடிக்கை உறுதி: தமிழகத்தில் உள்ள 2.77 கோடி மின் இணைப்புகளில் கடந்த மாத மின் கட்டணத்தில், 10.03 லட்சம் நுகா்வோருக்கு ஏற்பட்ட குளறுபடிகளுக்கு தீா்வு காணப்பட்டது. இதில், முந்தைய காலத்தில் தவறாக மின் கணக்கீடு செய்த ஊழியா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அமைச்சா் வி.செந்தில் பாலாஜி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com