உப்பனாற்றில் கிராமத்திற்குள் புகும் கடல்நீர்: கரை அமைக்க மக்கள் கோரிக்கை

உப்பனாற்றில் கரை இல்லாமல் இருப்பதாலேயே கடல்நீர் புகுவதாகவும் உடனடியாக ஆற்றின் கரையை பலமாக  அமைத்துத் தர வேண்டும் என  கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உப்பனாற்றில் கிராமத்திற்குள் புகும் கடல்நீர்: கரை அமைக்க மக்கள் கோரிக்கை

தரங்கம்பாடி: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள கிராமங்களான விநாயகர் பாளையம், காரன்தெரு பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக கடல்நீர் உட்புகுந்து வருவதால் அப்பகுதி மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். கிராமத்தையொட்டி செல்லும் உப்பனாற்றில் கரை இல்லாமல் இருப்பதாலேயே கடல்நீர் புகுவதாகவும் உடனடியாக ஆற்றின் கரையை பலமாக  அமைத்துத் தர வேண்டும் என  கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தரங்கம்பாடி விநாயகர் பாளையம், காரன்தெரு கிராமத்தையொட்டி செல்லும் உப்பனாற்றில் இருபக்கக் கரைகளும் மழை மற்றும் வெள்ளக் காலங்களில் உடைப்பு ஏற்பட்டு கரை இல்லாததால் அந்த ஆற்றின் வழியாகவே மேல்நோக்கி வரும் கடல்நீர்  உடைப்பு ஏற்பட்டு இருக்கும் பகுதிகளின் வழியாக கிராமத்திற்குள்  புகுந்து வருகிறது.

கடந்த பல ஆண்டுகளாக நீடிக்கும் இப்பிரச்சனைக்கு தீர்வு காண ஆற்றின் கரையை சீரமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலரும்,பேராசிரியருமான தேவசகாயம் கூறும் போது விநாயகர் பாளையம், காரன்தெரு ஆகிய இரு பகுதிகளிலும் ஏராளமான குடும்பங்கள் வசிக்கின்றனர்.

இப்பகுதி மக்களுக்கு உப்பனாற்றின் வழியாக கடல்நீர் உட்புகும் பிரச்சனை பெரும் சவாலாக இருக்கிறது. நீண்டகாலமாக நீடிக்கும் இந்நிலைக்கு தீர்வுக்கான பலமுறை அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். மேலும் ஆற்றையொட்டி அமைந்துள்ள தனியார் இறால் பண்ணைகளாலும் ஆற்றின் கரை சேதமடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மழை,வெள்ளக் காலங்களில் கடும் இன்னல்களுக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர்.எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறையினரும் உரிய நடவடிக்கை எடுத்து உப்பனாற்றின் கரையை சீரமைப்பதோடு,ஆற்றையொட்டியுள்ள இறால் பண்ணையின் நடவடிக்கைகளையும் ஆய்வு செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com