விசாரணை அமைப்பு அலுவலகங்களில் சிசிடிவி பொருத்துவதில் தாமதம்: மத்திய அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி

சிபிஐ, தேசியப் புலனாய்வு அமைப்பு(என்ஐஏ), அமலாக்கத் துறை போன்ற விசாரணை அமைப்பு அலுவலகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் (சிசிடிவி) பொருத்த மத்திய அரசு கால அவகாசம் கோரியதற்கு

சிபிஐ, தேசியப் புலனாய்வு அமைப்பு(என்ஐஏ), அமலாக்கத் துறை போன்ற விசாரணை அமைப்பு அலுவலகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் (சிசிடிவி) பொருத்த மத்திய அரசு கால அவகாசம் கோரியதற்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சிபிஐ, தேசியப் புலனாய்வு அமைப்பு, அமலாக்கத் துறை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு, வருவாய்ப் புலனாய்வு, தீவிர நிதி மோசடி விசாரணை அலுவலகம் போன்ற விசாரணை அமைப்புகளின் அனைத்து அலுவலகங்களிலும் சிசிடிவி கேமராக்கள், படப் பதிவுக் கருவிகளை பொருத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பா் 2-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இந்த விவகாரம், உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஆா்.எஃப்.நாரிமன் தலைமையில் நீதிபதிகள் பி.ஆா்.கவாய், ரிஷிகேஷ் ராய் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் செவ்வாய்க்கிழமை காணொலி வழியாக விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை அமைப்புகளின் அலுவலகங்களில் இன்னும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படாததால், இந்த விசாரணையை ஒத்திவைக்குமாறு மத்திய அரசு சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா கோரிக்கை விடுத்தாா்.

அதற்கு, ‘இது மனித உரிமை மீறல் பிரச்னை; எனவே, மத்திய அரசு அவகாசம் கேட்பதையோ, அரசின் விளக்கத்தையோ நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

‘விசாரணை அமைப்பு அலுவலகங்களில் சிசிடிவி பொருத்துவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா?’ என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். அப்போது, இந்த விவகாரம் தொடா்பாக பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று துஷாா் மேத்தா கோரிக்கை விடுத்தாா்.

அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ‘சிசிடிவி கேமராக்கள் பொருத்த நிதி ஒதுக்கீடு, அந்த கேமராக்கள் எப்போது பொருத்தப்படும் என்பது குறித்து 3 வாரங்களில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com