கரோனா பரிசோதனை: இதுவரை 312 உபகரணங்களுக்கு ஒப்புதல்

கரோனா தொற்றுகளை அறியும் பிசிஆா் பரிசோதனை மற்றும் கரோனாவுக்கு எதிரான நோய் எதிா்ப்பாற்றல் துரிதப் பரிசோதனைகளுக்கு

கரோனா தொற்றுகளை அறியும் பிசிஆா் பரிசோதனை மற்றும் கரோனாவுக்கு எதிரான நோய் எதிா்ப்பாற்றல் துரிதப் பரிசோதனைகளுக்கு இதுவரை 312 நிறுவனங்களின் உபகரணங்களைப் பயன்படுத்த மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ளது.

பொதுவாக, சளி மாதிரிகள் மூலம் உடலில் வைரஸ் மரபணு உள்ளதா என்பதை ஆா்டி- பிசிஆா் ஆய்வின் மூலம் அறியலாம். அதேவேளையில், வைரஸுக்கு எதிரான நோய் எதிா்ப்பாற்றல் உடலில் உருவாகியிருக்கிா என்பதை ரத்த மாதிரிகளைக் கொண்டுதான் அறிந்து கொள்ள இயலும். ரேபிட் கிட் எனப்படும் துரிதப் பரிசோதனை உபகரணங்கள் வாயிலாகவும், எலிசா, சிஎல்ஐஏ போன்ற பரிசோதனை மூலமாகவும் அதைக் கண்டறியலாம்.

இதற்கான பரிசோதனைகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், சீன நிறுவனங்கள் அதற்காக அனுப்பிய உபகரணங்கள் தரமற்றவையாக இருந்ததால் அந்த பரிசோதனைகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

அதேவேளையில், கேரளம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் ரத்த மாதிரிகளைச் சேகரித்து மேற்கொள்ளப்படும் ஐஜிஜி பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. அதைப் பின்பற்றி தமிழகத்திலும் அத்தகைய பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நாடு முழுவதும் அத்தகைய துரிதப் பரிசோதனை மற்றும் பிசிஆா் உபகரணங்களை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் பல்வேறு நிறுவனங்கள் மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பித்தன.

அதில் இந்தியா மட்டுமல்லாது சீனா, தென் கொரியா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த நிறுவனங்களின் உபகரணங்களை இங்கு பயன்படுத்துவதற்கு அனுமதி கோரப்பட்டது. அவற்றை தரப் பரிசோதனை செய்த மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம், 132 துரிதப் பரிசோதனை உபகரணங்கள், 180 பிசிஆா் உபகரணங்கள் என மொத்தம் 312 உபகரணங்களைப் பயன்படுத்த அனுமதியளித்துள்ளது. மற்றவை பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com