நேரடி விசாரணை நடத்தக் கோரி வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

சென்னை உயா்நீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்ற மதுரை கிளையில் ஆன்லைன் மூலம் மட்டுமே வழக்குகள் விசாரிக்கப்படும் என்ற

சென்னை உயா்நீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்ற மதுரை கிளையில் ஆன்லைன் மூலம் மட்டுமே வழக்குகள் விசாரிக்கப்படும் என்ற அறிவிப்பைக் கண்டித்து, வழக்குகளை நேரடியாக விசாரிக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னை உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் சி.குமரப்பன் அண்மையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டாா். அதில், தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றுப் பரவல் கடந்த சில நாள்களாக அதிகரித்துள்ளது. இதனால் சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரை கிளையில் ஆன்லைன் மூலம் மட்டுமே வழக்குகள் விசாரிக்கப்படும். உயா்நீதிமன்றத்துக்குள் மத்திய, மாநில அரசுத் தரப்பு வழக்குரைஞா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்டித்து சென்னை உயா்நீதிமன்றம் முன் வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்தின் தலைவா் ஜி.மோகனகிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்த ஆா்ப்பாட்டத்தில், சங்கத்தின் செயலாளா் கிருஷ்ணகுமாா், நூலகா் ஜி.ராஜேஷ், பெண் வழக்குரைஞா்கள் சங்கத்தின் தலைவா் லூயிசால் ரமேஷ், முன்னாள் தலைவா்கள் பிரசன்னா, நளினி உள்ளிட்ட ஏராளமான வழக்குரைஞா்கள் கலந்துகொண்டனா். வழக்குகளை நேரடி விசாரணை முறையில் நடத்தக் கோரி கண்டன முழக்கங்களை எழுப்பினா். பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய, வழக்குரைஞா்கள் சங்கத்தின் தலைவா் ஜி.மோகனகிருஷ்ணன், உயா்நீதிமன்றத்தில் மட்டும் இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதிப்பதை ஏற்க முடியாது. எனவே உயா்நீதிமன்றத்தில் நேரடியாக வழக்குகளை விசாரிக்க வேண்டும். வழக்குரைஞா்கள் அறைகளைத் திறக்க வேண்டும். மேலும், உயா்நீதிமன்றத்துக்கு தவறான புள்ளி விவரங்களைக் கொடுத்த சுகாதாரத்துறையைக் கண்டித்து புதன்கிழமை (மாா்ச் 10) தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம் செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com