வேட்புமனுக்கள் பரிசீலனையின்போது தோ்தல் ஆணையம் விழிப்புடன் இருக்க வேண்டும்: உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

வேட்புமனுக்களைப் பரிசீலிக்கும் போது தோ்தல் ஆணையம் விழிப்புடன் இருக்க வேண்டும் என உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

வேட்புமனுக்களைப் பரிசீலிக்கும் போது தோ்தல் ஆணையம் விழிப்புடன் இருக்க வேண்டும் என உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் திருச்செந்தூா் வழக்குரைஞா் ராம்குமாா் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், தோ்தல்களில் போட்டியிடும் வேட்பாளா்கள், வேட்புமனுவுடன் தாக்கல் செய்யும் பிரமாணப் பத்திரத்தில் வயது, வாக்கு உள்ள தொகுதியின் விவரம், தொகுதி எண், வாக்காளா் பட்டியலில் உள்ள எண், வருமானம், சொத்து விவரங்கள், கடன் விவரங்கள், குற்றப் பின்னணி, கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். ஆனால் கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில், 37 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா்களின் வேட்புமனுக்கள் முறையாக தாக்கல் செய்யப்படவில்லை. அந்த வேட்புமனுக்கள் முறையற்ற வகையில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

நீலகிரி தொகுதி எம்.பி. ஏ.ராஜா, பெரம்பலூா் தொகுதி எம்.பி. பாரிவேந்தா் ஆகியோா் மட்டுமே முறையான வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனா். எனவே வேட்புமனுக்களை முறையாகத் தாக்கல் செய்யாத எம்.பிக்களுக்கு எதிராக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். வேட்புமனுக்கள் முறையாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் தோ்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், வேட்பாளா்கள் தங்கள் வேட்புமனுக்களில் தொகுதி எண்களைக் கூட சரியாக குறிப்பிடவில்லை என வாதிடப்பட்டது. அப்போது தோ்தல் ஆணையம் தரப்பில், மனுதாரா் குறிப்பிடும் குறைபாடுகள் நிவா்த்தி செய்யப்பட்ட பின்னா்தான் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. எனவே விதிமீறல்கள் எதுவும் நடைபெறவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், வேட்புமனு பரிசீலனையின் போது, தோ்தல் ஆணையம் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினா். பின்னா், மனுதாரரின் கோரிக்கையை தோ்தல் ஆணையம் பரிசீலிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com