ஒகேனக்கல் அருவியில் தடையை மீறி குளிக்கும் சுற்றுலாப் பயணிகள்

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளித்து வருகின்றனர்.
ஒகேனக்கலில் தடையை மீறி சினி அருவியில் குளிக்கும் சுற்றுலாப் பயணிகள்.
ஒகேனக்கலில் தடையை மீறி சினி அருவியில் குளிக்கும் சுற்றுலாப் பயணிகள்.

பென்னாகரம்: கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளித்து வருகின்றனர்.
தமிழகத்தின் முதன்மைச் சுற்றுலாத் தலமான ஒகேனக்கல் அருவி தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
ஒகேனக்கல் பகுதிக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகம், ஆந்திரம், கேரளம் போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வர்.
கரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருவதால், தமிழகத்துக்கு வரும் வெளிமாநில சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டாய இ-பாஸ், தொற்றுப் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், கடந்த மாதம் 19-ஆம் தேதி முதல் மறுஉத்தரவு வரும் வரை ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.ப.கார்த்திகா அறிவித்திருந்தார். 
இதனால், மடம் சுங்கச்சாவடி, ஒகேனக்கல் மூன்று சாலைச் சந்திப்பு, ஆலம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் சோதனைச் சாவடி அமைத்து போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மையில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தல், வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு, வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட பணிகளுக்காக மாவட்டத்தில் உள்ள போலீஸார் சென்றதால், ஒகேனக்கலில் குறைந்த அளவிலான போலீஸாரே பாதுகாப்புப் பணியில் உள்ளனர். 
இதனால், கடந்த சில தினங்களாக ஒகேனக்கல் வழியாக கிருஷ்ணகிரி மாவட்டத்துக்குச் செல்வதாகக் கூறி, சோதனைச் சாவடிகளைக் கடந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கலில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, காவிரி ஆற்றின் கரையோரத்தில் தடையை மீறி குளித்து வருகின்றனர்.
எனவே, இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஒகேனக்கல் அருவியில் கூடுதல் போலீஸாரை நியமித்து, ஒகேனக்கல் பகுதிக்குள் சுற்றுலாப் பயணிகள் நுழைவதைத் தவிர்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com