காஞ்சிபுரத்தில் அரசு விதிகளை மீறி கடைகள் திறப்பு: அபராதமாக ரூ.19,600 வசூலிப்பு

கரோனா அச்சுறுத்தல் காரணமாக வியாழக்கிழமை முதல் அத்தியாவசியக் கடைகளைத் தவிர மற்ற கடைகள் திறந்திருந்ததை மூடுமாறு நகராட்சி அதிகாரிகள் கூட்டமாகச் சென்று வியாழக்கிழமை வலியுறுத்தினார்கள்.
நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி தலைமையில் அத்தியாவசியமில்லாத கடைகளை மூடுமாறு கூட்டமாக வந்த நகராட்சி அதிகாரிகள்
நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி தலைமையில் அத்தியாவசியமில்லாத கடைகளை மூடுமாறு கூட்டமாக வந்த நகராட்சி அதிகாரிகள்


கரோனா அச்சுறுத்தல் காரணமாக வியாழக்கிழமை முதல் அத்தியாவசியக் கடைகளைத் தவிர மற்ற கடைகள் திறந்திருந்ததை மூடுமாறு நகராட்சி அதிகாரிகள் கூட்டமாகச் சென்று வியாழக்கிழமை வலியுறுத்தினார்கள்.

அரசு விதிகளை மீறியதாக 10க்கும் மேற்பட்ட கடைகளின் உரிமையாளர்களிடமிருந்து ரூ.19600 அபராதமாகவும் வசூலித்தனர். 

கரோனா அச்சுறுத்தல் காரணமாக இன்று வியாழக்கிழமை முதல் பால்க்கடைகள், மருந்துக்கடைகள், மளிகைக்கடைகள் மட்டும் மதியம் 12 மணி வரை திறந்திருக்கலாம். மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்ற புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததையடுத்து காஞ்சிபுரம் நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி தலைமையில் 15க்கும் மேற்பட்ட நகராட்சி அதிகாரிகள் அத்தியாவசியமில்லாத கடைகளை மூடுமாறு நேரில் கூட்டம் கூட்டமாகச் சென்று வலியுறுத்தினார்கள்.

காஞ்சிபுரத்தின் பிரதான சாலைகளான காந்தி சாலை,காமராஜர்சாலை, அரசு மருத்துவமனை சாலை ஆகிய பகுதிகளில் சென்று அத்தியாவசியமில்லாமல் திறந்து வைக்கப்பட்டிருந்த கடைகளை மூடச்சொல்லி அடைத்தனர். வணிக நிறுவனங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றாதது,கடைகளுக்கு வருவோருக்கு கை கழுவும் திரவம் கொடுக்காதது, வெப்பமானி இல்லாமை போன்ற காரணங்களுக்கு 9 கடைகளுக்கு தலா ரூ.500 வீதமும், ஒரு கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

முகக்கவசம் அணியாதவர்கள் 48 பேரிடமிருந்து ரூ.200 வீதம் ரூ.9600 அபராதம் வசூலித்தது உள்பட மொத்தம் ரூ.19,600 அபராதமாக நகராட்சி அதிகாரிகள் வசூலித்தனர். இப்பணியில் நகராட்சி பொறியாளர் ஆனந்த ஜோதி,நகரமைப்பு ஆய்வாளர் வெங்கடேசன்,நகரமைப்பு அலுவலர் சுப்புத்தாய் ஆகியோர் உள்பட அதிகாரிகள் பலரும் ஈடுபட்டிருந்தனர்.

மதியம் வெறிச்சோடிய காஞ்சிபுரம் 

அரசின் புதிய கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மேல் எந்தக் கடைகளும் இருக்கக்கூடாது என்ற அறிவிப்பின் காரணமாக காஞ்சிபுரம் நகரமே வெறிச்சோடிக் காணப்பட்டது. நண்பகல் 12 மணி வரை காய்கறிக்கடைகள், மளிகைக்கடைகள் ஆகியனவற்றில் அதிகமான கூட்டம் இருந்ததையும் காண முடிந்தது. ‘

நண்பகல் 12 மணிக்கு மேல் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டதால் காஞ்சிபுரம் நகரமே வெறிச்சோடிக் காணப்பட்டது.ஒரு சிலர் மட்டும் இருசக்கர வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அரசுப் பேருந்துகள் ஒரு சில பயணிகளோடு மட்டுமே இயக்கப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com