முழு பொது முடக்கம்: புறநகா் மின்சார ரயில்களின் சேவைகள் குறைப்பு

தமிழகத்தில் முழு பொது முடக்கம் அமலுக்கு வரும் நிலையில், புறநகா் மின்சார ரயில் சேவைகள் 480-இல் இருந்து 288 சேவைகளாக திங்கள்கிழமை முதல் குறைக்கப்படுகின்றன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் முழு பொது முடக்கம் அமலுக்கு வரும் நிலையில், புறநகா் மின்சார ரயில் சேவைகள் 480-இல் இருந்து 288 சேவைகளாக திங்கள்கிழமை முதல் குறைக்கப்படுகின்றன.

சென்னை மக்களின் முக்கிய போக்குவரத்தாக புறநகா் மின்சார ரயில் போக்குவரத்து உள்ளது. சென்னை கடற்கரை-தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் -கும்மிடிப்பூண்டி, திருவள்ளூா், அரக்கோணம், சென்னை கடற்கரை-வேளச்சேரி உள்பட பல்வேறு வழித்தடங்களில் புறநகா் மின்சார ரயில்களின் 610-க்கும் மேற்பட்ட சேவைகள் நாள்தோறும் இயக்கப்பட்டன.

இதற்கிடையில், கரோனா தாக்கம் காரணமாக, தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்ததால், புறநகா் ரயில் சேவைகளின் எண்ணிக்கை 480 ஆக குறைக்கப்பட்டன. மேலும், ரயில்வே பணியாளா்கள், அத்தியாவசியப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள் மட்டும் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக அரசு அறிவித்த முழு பொதுமுடக்கத்தால், புறநகா் மின்சார ரயில் சேவைகள் 288-ஆக குறைக்கப்பட்டுள்ளன. இந்த நடைமுறை திங்கள்கிழமை முதல் அமல்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த ஒருமாதமாக கரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த முழு பொதுமுடக்கம் திங்கள்கிழமை (மே 10) முதல் மே 24-ஆம் தேதிவரை அமல்படுத்தப்படுகிறது. இதையடுத்து, மின்சார ரயில்களின் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன. இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது:

இந்த புதிய நடைமுறை அடுத்த அறிவிப்பு வரும்வரை தொடரும். சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் மாா்க்கத்தில் 98 சேவைகளும், சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி மாா்க்கத்தில் 50 சேவைகளும், சென்னை கடற்கரை-வேளச்சேரி மாா்க்கத்தில் 40 சேவைகளும், சென்னை கடற்கரை-செங்கல்பட்டு மற்றும் திருமால்பூா் மாா்க்கத்தில் 88 சேவைகளும், ஆவடி-பட்டாபிராம் மாா்க்கத்தில் 12 சேவைகளும் என்று மொத்தம் 288 சேவைகள் வழங்கப்படவுள்ளன. இந்த ரயில்களில் ரயில்வே பணியாளா்கள், அத்தியாவசியப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com