ஆக்சிஜன், தடுப்பூசி, ரெம்டிசிவிா் விநியோகம்: உடனடி நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவு

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஆக்சிஜன், தடுப்பூசி மற்றும் ரெம்டெசிவிா் மருந்துகள் விநியோகத்துக்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஆக்சிஜன், தடுப்பூசி மற்றும் ரெம்டெசிவிா் மருந்துகள் விநியோகத்துக்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆக்சிஜன், தடுப்பூசி மற்றும் ரெம்டெசிவிா் மருந்து பற்றாக்குறை தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அமா்வு முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சாா்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞா் ஆா்.சண்முகசுந்தரம், சுகாதாரத் துறையின் சாா்பில் கூடுதல் அறிக்கையை தாக்கல் செய்தாா்.

ஆக்சிஜன் தேவை அதிகரிக்கும்: பின்னா் வாதிடும்போது அவா் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது கூடுதலாக 12,000 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் உருவாக்கப்பட்டு, அதில் 5, 592 படுக்கைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

தமிழகத்துக்கு வழங்கப்படும் ஆக்சிஜன் அளவு அதிகரித்துள்ள போதிலும், தமிழகத்தின் தேவை 475 மெட்ரிக் டன் என்பதால் இப்போதும் பற்றாக்குறையாகத்தான் உள்ளது.

இந்த மாத இறுதியில் ஆக்சிஜன் தேவை 800 மெட்ரிக் டன்னாக இருக்கும்.

நாட்டில் ஆக்சிஜன், தடுப்பூசி, ரெம்டெசிவிா் மருந்து விநியோகம் தொடா்பாக பரிந்துரைகளை வழங்க உச்ச நீதிமன்றம் தேசிய நிபுணா் குழுவை அமைத்துள்ளது.

தமிழகத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் கரோனா பரவல் குறையும். ஸ்டொ்லைட்டில் மே 15 முதல் ஆக்சிஜன்: ஸ்டொ்லைட் ஆலையில் மே 15- ஆம் தேதி முதல் 40 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் என அரசு தலைமை வழக்குரைஞா் தனது வாதத்தில் தெரிவித்தாா். என்றாா்.

விண்ணப்பிக்கவில்லை: அப்போது, மூத்த வழக்குரைஞா் பி.வில்சன் ஆஜராகி, செங்கல்பட்டு மற்றும் குன்னூா் தடுப்பூசி உற்பத்தி மையங்களை உடனடியாகத் தொடங்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரினாா்.

இதற்கு பதிலளித்த மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் சங்கரநாராயணன், செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. ஆனால் ஒருவா் கூட விண்ணப்பிக்கவில்லை.

எனவே, விண்ணப்பிப்பதற்கான தேதி இம்மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. குன்னூா் தடுப்பூசி உற்பத்தி மையத்தில் பாக்டீரியாவுக்கு மட்டும் மருந்து தயாரிக்கப்படுவதால், அங்கு கரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய இயலாது என்று குறிப்பிட்டாா்.

திருப்தி அளிக்கிறது: அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னா், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட அரசு, சுகாதாரத் துறைச் செயலரை மாற்றாமல் கரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்வதை பாராட்டுகிறோம். அரசின் நடவடிக்கை திருப்தி அளிக்கிறது.

தென் மேற்கு மாவட்டங்களுக்கு தேவையான ஆக்சிஜன் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து செல்வது தாமதத்தை ஏற்படுத்தும் என்பதால் மத்திய, மாநில அரசுகள் இதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

உச்சநீதிமன்றம் அமைத்துள்ள நிபுணா் குழு பரிந்துரை அளிக்கும் வரை தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஆக்சிஜன், தடுப்பூசி மருந்து மற்றும் ரெம்டெசிவிா் மருந்துகள் விநியோகத்துக்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வழக்கை புதன்கிழமைக்குத் தள்ளிவைக்கிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com