சிறு-குறு நிறுவனங்களுக்கு ரூ.168 கோடி மானியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கரோனா நோய்த் தொற்று பாதிப்பு மற்றும் பொது முடக்கத்தைக் கருத்தில் கொண்டு, சிறு-குறு நிறுவனங்களுக்கு முதலீட்டு மானியமாக ரூ.168 கோடி விடுவிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 
சிறு-குறு நிறுவனங்களுக்கு ரூ.168 கோடி மானியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கரோனா நோய்த் தொற்று பாதிப்பு மற்றும் பொது முடக்கத்தைக் கருத்தில் கொண்டு, சிறு-குறு நிறுவனங்களுக்கு முதலீட்டு மானியமாக ரூ.168 கோடி விடுவிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
 பொது முடக்கக் காலத்தில் தொழில் துறையினருக்கான சலுகைகள் குறித்து அவர்களிடையே முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு:-
 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு முதலீட்டு மானியம் வழங்க நிகழ் நிதியாண்டில் ரூ.280 கோடி ஒதுக்கப்பட்டது. அதில், 60 சதவீதத் தொகையான ரூ.168 கோடியானது உடனடியாக நிறுவனங்களுக்கு விடுவிக்கப்படும். இதனால், தகுதியான நிறுவனங்களுக்கு மானியம் கிடைக்கும்.
 முத்திரைத்தாள் பதிவுக் கட்டணம்: குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஆகியன வங்கி, நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் உதவி பெறும் போது முத்திரைத் தாள் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இதை செலுத்துவதற்கான கால அவகாசம் டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 தீயணைப்பு, தொழிலாளர், தொழில் பாதுகாப்பு, வணிக உரிமம் உள்ளிட்ட அனைத்து சட்டப்பூர்வ உரிமங்களையும் நீட்டிப்பதற்கான அவகாசம் டிசம்பர் வரை நீட்டிக்கப்படுகிறது. முதலீட்டு மானியம் பெற விற்று முதலினை 25 சதவீதம் அதிகரிக்க வேண்டுமென்ற விதிமுறை உள்ளது. அதற்கும் டிசம்பர் வரை கால நீட்டிப்பு செய்யப்படுகிறது.
 சிட்கோ நிறுவனத்துக்குச் செலுத்தப்பட வேண்டிய மனை விலை, தவணைத் தொகை மற்றும் தொழிற்கூடங்களுக்கான வாடகை போன்றவற்றைச் செலுத்துவதற்கு மேலும் ஆறு மாதங்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது. சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் 45 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும்.
 ஆட்டோ-டாக்சி சாலை வரி: ஆட்டோ ரிக்ஷா மற்றும் டாக்சி ஆகியவற்றுக்கான சாலை வரி கட்டணங்கள் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு செய்து கட்டுவதற்கு அவகாசம் அளிக்கப்படுகிறது. மேலும், அவற்றுக்கான காப்பீட்டுக் கட்டணத் தொகையைச் செலுத்தவும் மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். பெரிய, சிறிய தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் செலுத்த வேண்டிய தொழில் வரியை செலுத்த மேலும் மூன்று மாதங்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com