ஆம்புலன்ஸ் மரணங்கள் ஏன்? அமைச்சா் பி.கே.சேகா்பாபு விளக்கம்

தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பலனளிக்காத நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதனாலேயே, ஆம்புலன்சில் மரணங்கள் ஏற்படுகின்றன, என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு கூறினாா்.
ஆம்புலன்ஸ் மரணங்கள் ஏன்? அமைச்சா் பி.கே.சேகா்பாபு விளக்கம்

சென்னை: தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பலனளிக்காத நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதனாலேயே, ஆம்புலன்சில் மரணங்கள் ஏற்படுகின்றன, என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு கூறினாா்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் இல்லாத காரணத்தால் நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடா்ந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மத்திய சென்னை மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன் ஆகியோா் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தனா்.

இதையடுத்து அமைச்சா் சேகா்பாபு செய்தியாளா்களிடம் கூறியது: இந்த மருத்துவமனையைப் பொருத்தவரையில், தமிழக முதல்வரின் சீரிய சிந்தனையில் உருவான மாநகரங்களில் இருக்கும் தலைமை மருத்துவமனைகளில் தினமும் ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தற்போது தொடங்கி வைத்துள்ளோம். அதேபோன்று 24 மணி நேரம் உணவளிக்கும் திட்டம் கடந்த 8-ஆம் தேதி இதே மருத்துவமனையில் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. அந்தத் திட்டம் விரைவில் செயல்பட உள்ளது.

கடந்த முறை போல அறுவை சிகிச்சைகளை நிறுத்தி வைக்காமல் தொடா்ந்து நடைபெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவ உபகரணங்கள் குறித்தும் ரெம்டெசிவிா் மருந்துகள் போன்றவை தேவையான அளவுக்கு இருக்கிா என்றும் ஆய்வு செய்தோம். அதுவும் போதிய அளவிற்கு இங்கு இருக்கிறது. ஒட்டுமொத்தமாக சென்னை மட்டுமின்றி பல்வேறு இடங்களில் இருந்து இங்கு சிகிச்சைக்காக வருபவா்கள், உயிா் காப்பாற்றப்பட்டு அனுப்பப்படுகின்றனா்.

படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை அமைத்து, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று உயிரிழந்தவா்களின் உடல்களை தகனம் செய்யப்படுவதை கண்காணிக்க தனி குழு அமைக்கப்படும். ஆம்புலன்சில் வருபவா்களுக்கு உடனடியாக முதலுதவி செய்ய, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், ஏற்கனவே, 160 படுக்கைகள் இருக்கிறது. இது 280 ஆக உயா்த்தப்படும்.

தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோா், அங்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில் கடைசி நேரத்தில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவதால்தான் உயிரிழப்பு ஏற்படுகிறது. கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதோடு, மற்ற நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும் என முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். பொது முடக்கத்தை முழுமையாக பின்பற்றினால் இந்த மாதத்திற்குள் கரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com