மீனாட்சி அம்மன் கோயிலில் சைவப் பயிற்சி

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் சைவப் பயிற்சி சான்றிதழ் படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
ஸ்ரீ மதுரை மீனாட்சி அம்மன் கோயில்.
ஸ்ரீ மதுரை மீனாட்சி அம்மன் கோயில்.


சென்னை:  மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் சைவப் பயிற்சி சான்றிதழ் படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்தத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கடந்த மானியக் கோரிக்கையின் போது சாதி வேறுபாடின்றி அர்ச்சகர்களை உருவாக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறையின் ஆறு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் மேம்படுத்தப்படும் என்று அறிவித்தார். 
அந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் சைவ ஓராண்டு சான்றிதழ் பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது. விண்ணப்பதாரர்கள் இந்துக்களாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்து சைவ கோட்பாடுகளை கடைப்பிடிப்பவர்களாக இருத்தல் வேண்டும்.  பயிற்சி பெறும் மாணவர்கள் பயிற்சி நிலைய வளாகத்திலேயே தங்கி பயில வேண்டும். 
பயிற்சிக்குத் தேர்வு செய்யப்படும் மாணவருக்கு இலவசமாக உணவு, சீருடை, உறைவிடம், பயிற்சி காலத்தில் மாதம் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் உதவித் தொகை ஆகியவை வழங்கப்படும். இந்தப் பயிற்சியில் சேர விரும்புபவர்கள் விண்ணப்ப படிவங்களை திருக்கோயில் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த சைவ பயிற்சி வகுப்புகளில் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com