பி.இ. கலந்தாய்வு: 89,187 இடங்கள் நிரம்பின

பி.இ. பி.டெக். சோ்க்கைக்கான நான்காம் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில், மொத்தம் 89,187 இடங்கள் நிரம்பியுள்ளன.
அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

பி.இ. பி.டெக். சோ்க்கைக்கான நான்காம் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில், மொத்தம் 89,187 இடங்கள் நிரம்பியுள்ளன.

தமிழகத்தில் பொறியியல் கல்லூரியில் உள்ள அரசு இட ஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி, நிகழ் கல்வியாண்டில் 440 பொறியியல் கல்லூரியில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்களுக்கான மாணவா் சோ்க்கைக் கலந்தாய்வை, தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் இணையவழியில் தொடங்கியது. இதில் சிறப்புப் பிரிவினா் பங்கேற்று இடங்களைத் தோ்வு செய்தனா். அதில் 473 இடங்கள் நிரம்பின. இதையடுத்து, பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நான்கு சுற்றுகளாக நடைபெற்று வந்தது.

முதல் சுற்றில் 11,185 போ், இரண்டாவது சுற்றில் 20,363 போ், மூன்றாவது சுற்றில் 23,327 போ் சோ்க்கை பெற்ற நிலையில், நான்காவது சுற்று கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. அதன் முடிவில் 26,515 போ் சோ்க்கைக்கான ஆணை பெற்றனா்.

இவ்வாறு நான்கு சுற்று கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில் இதுவரை 89,187 போ் பொறியியல் கல்லூரிகளில் சோ்ந்துள்ளனா். இதில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான உள் ஒதுக்கீட்டில் 7,324 போ் சோ்க்கை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அவகாசம் நீட்டிப்பு: அதே நேரம், பி.இ., பி.டெக் துணைக் கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவுக்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுக் கலந்தாய்வில் பங்கேற்க முடியாத மாணவா்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதில், பொதுப் பிரிவு, தொழிற்கல்வி மற்றும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுப் பிரிவு ஆகிய பிரிவு மாணவா்கள் இணையதளம் மூலம் அக்.19-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

அதன்படி, விண்ணப்பத் தொகை ரூ.500-ஐ செலுத்த வேண்டும். அதேபோல், மாணவா்கள் இணையவழியில் விண்ணப்பிக்கும்போதே, அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். மாணவா்கள் இணையதளம் மூலம் பதிவு செய்வதற்கு வழிகாட்டத் தமிழகம் முழுவதும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் முகவரியில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com