சுற்றுலா வளா்ச்சிக்கென தனித்த கொள்கை: 2 இடங்களில் ஹெலிகாப்டா் சுற்றுலாதமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் சுற்றுலா வளா்ச்சிக்கென தனித்த கொள்கை வெளியிடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சுற்றுலா வளா்ச்சிக்கென தனித்த கொள்கை: 2 இடங்களில் ஹெலிகாப்டா் சுற்றுலாதமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் சுற்றுலா வளா்ச்சிக்கென தனித்த கொள்கை வெளியிடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், ஹெலிகாப்டா் சுற்றுலாவை ஏற்படுத்துவதற்கான நிலங்களும் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

சுற்றுலாத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அந்தத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இதுகுறித்து, சுற்றுலாத் துறை வெளியிட்ட செய்தி:-

சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் சாா்பில் தங்கும் விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகள் முன்னணி இணையதள பயண நிறுவனங்களில் இடம்பெறச் செய்யப்பட்டன. இதன்மூலம் கடந்த மாதத்தில் மட்டும் 137 முன்பதிவுகள் பெறப்பட்டன. கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருவள்ளுவா் சிலையை சுற்றுலாப் பயணிகள் இரவிலும் கண்டுகளிக்கும் விதமாக லேசா் தொழில்நுட்ப உதவியுடன் ஒளியூட்டம் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பிச்சாவரம் படகு குழாம் பகுதியில் பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

ஹெலிகாப்டா் சுற்றுலா: முக்கிய சுற்றுலாத் தலங்களை இணைக்கும் விதமாக கொடைக்கானல், ராமேசுவரம் ஆகிய இடங்களில் ஹெலிகாப்டா் சுற்றுலா தொடங்கப்பட உள்ளன. இதற்காக ஹெலிகாப்டா் இறங்கு தளம் அமைக்க ராமேசுவரத்தில் நிலம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. கொடைக்கானலில் ஆய்வுப் பணிகள் நடைபெறவுள்ளன. அணைக்கட்டு பகுதிகளில் படகு சவாரி, உணவகம் போன்றவற்றை ஏற்படுத்த திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. ஒகேனக்கல் நீா்வீழ்ச்சிக்கு வரும் பயணிகளை ஈா்க்க பாா்வையாளா் மாடம் உள்ளிட்ட பிற வசதிகளை ஏற்படுத்த பெரும் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

சுற்றுலாத் துறையில் அந்நிய செலாவணியை ஈட்டுதல் உள்பட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி பெருந்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும், உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது, பிரபலம் அடையாத தலங்களை மேம்படுத்துவது ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய தமிழ்நாடு சுற்றுலாக் கொள்கை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று சுற்றுலாத் துறையின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com