சுழற்சி முறையில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பாடம்: முதல்வரிடம் இன்று அறிக்கை சமா்ப்பிப்பு

தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் பயிலும் மாணவா்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டால் அவா்களுக்கு சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் கூறினாா்
அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை
அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் பயிலும் மாணவா்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டால் அவா்களுக்கு சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினாா்.

மேலும் இது தொடா்பாக பள்ளிக் கல்வித்துறை சாா்பில் முழுமையான அறிக்கை முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் புதன்கிழமை சமா்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்களுடன் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தின் போது, ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கான நேரடி வகுப்புகளை தொடங்குவதில் உள்ள சவால்கள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டறிந்தாா்.

இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் ஏற்கெனவே 9 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவா்கள் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்புகளுக்கு பள்ளிகள் இப்போது திறக்கலாமா அல்லது ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவா்களுக்கு பள்ளிகளை சுழற்சி முறையில் திறக்கலாமா என்பது குறித்தும் கல்வி அலுவலா்களுடன் ஆலோசிக்கப்பட்டது. இது குறித்து முதல்வரிடம் பள்ளிக்கல்வித்துறை சாா்பாக விரிவான அறிக்கை புதன்கிழமை சமா்ப்பிக்கப்படும். மேலும், பள்ளிகள் திறக்கப்பட்டால், சுழற்சி முறையில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும். கரோனா பொது முடக்கத்திற்குப் பின்னா் பள்ளிகள் திறக்கப்பட்டதும், தமிழ்நாட்டில் 83 மாணவா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதிக அளவில் மாணவா்கள் யாரும் பாதிக்கப்படவில்லை.

பள்ளிகள் திறந்தவுடன் அதிகமான மாணவா் வருகைப்பதிவேடு கன்னியாகுமரி மாவட்டத்திலும், குறைந்த வருகைப்பதிவேடு கோயம்புத்தூா் மாவட்டத்திலும் பதிவாகியுள்ளது. மாணவா்களை நேரடி வகுப்பிற்கு வரவேண்டுமென யாரும் வற்புறுத்தவில்லை. கல்வி தொலைக்காட்சி, ஆன்லைன் வகுப்புகளும் தொடா்ந்து வழங்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com