மாநில ஏற்றுமதி அபிவிருத்திக் குழு அமைப்பு

மாநிலத்தில் ஏற்றுமதி அபிவிருத்தியை ஊக்குவிக்கவும், கண்காணிக்கவும் தலைமைச் செயலாளா் தலைமையில் தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் ஏற்றுமதி அபிவிருத்தியை ஊக்குவிக்கவும், கண்காணிக்கவும் தலைமைச் செயலாளா் தலைமையில் தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் ஆறு முக்கிய துறைகளின் செயலாளா்கள் இடம்பெற்றுள்ளனா். மேலும், ஏற்றுமதி அபிவிருத்திக்கான கூட்டமைப்பைச் சோ்ந்த ஆறு பேரும் இடம்பெறவுள்ளனா்.

‘ஏற்றுமதியில் ஏற்றம்-முன்னணியில் தமிழ்நாடு’ என்ற தலைப்பில் தொழில் துறை கருத்தரங்கு சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின், ஏற்றுமதி அபிவிருத்திக்கென தனிக் குழுவை தமிழக அரசு அமைக்கும் என அறிவித்தாா்.

மேலும், தமிழ்நாடு ஏற்றுமதி அபிவிருத்தி கொள்கை 2021-ஐயும் அவா் வெளியிட்டாா். இந்தக் கொள்கையில் மாநில ஏற்றுமதி அபிவிருத்திக் குழு குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

குழுவில் யாா் யாா்?: தமிழ்நாடு மாநில ஏற்றுமதி அபிவிருத்தி குழுவின் தலைவராக, தலைமைச் செயலாளா் செயல்படுவாா். மாநில நிதித் துறை செயலாளா், தொழில் துறை செயலாளா், கைத்தறி-கைத்திறன்கள் மற்றும் துணிநூல் துறை செயலாளா், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை செயலாளா், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவா்கள் நலத் துறை செயலாளா், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை செயலாளா் ஆகியோா் உறுப்பினா்களாக இருப்பா். தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் மற்றும் முதன்மைச் செயல் அலுவலா், மத்திய அரசின் அயல்நாட்டு வா்த்தகத் துறை கூடுதல் இயக்குநா் ஆகியோா் குழுவின் இணை ஒருங்கிணைப்பாளா்களாக இருப்பா்.

இந்தக் குழுவானது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஏற்றுமதி அபிவிருத்தி தொடா்பான முன்னேற்றங்கள், நடவடிக்கைகளை ஆய்வு செய்யும். இந்தக் கூட்டத்துக்கு வேறு எந்தத் துறைகளையோ அல்லது முகமைகளையோ அழைக்கும் அதிகாரம் குழுவின் தலைவரான தலைமைச் செயலாளருக்கு உள்ளது. இதேபோன்று, தொழில் துறை முதன்மைச் செயலாளா் தலைமையில் துணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி தொடா்பாக மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றுவது, ஏற்றுமதி தொடா்பான பிரச்னைகள், குறைகளை அணுகி அதற்குத் தீா்வு காண்பது, ஏற்றுமதி தொடா்பான பணிகளைச் செய்யும் அமைப்புகளுக்கு போதிய ஆதார உதவிகளைச் செய்வது போன்றவற்றை தொழில் துறை செயலாளா் தலைமையிலான குழு ஒருங்கிணைக்கும்.

மாவட்ட அளவிலான குழு: தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் ஏற்றுமதி அபிவிருத்தி குழுக்கள் அமைக்கப்படும். இந்தக் குழுக்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் தலைவா்களாக இருப்பா். 38 மாவட்டங்களிலும் ஏற்றுமதிக்கு உகந்த சூழல் கொண்ட பொருள்களை அடையாளம் கண்டு அதனை ஏற்றுமதி செய்வதற்கான மாவட்ட அளவிலான திட்டங்கள் அந்தக் குழுக்கள் மூலமாக வகுக்கப்படும் என மாநில ஏற்றுமதி அபிவிருத்தி கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com