தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு 3 தேசிய விருதுகள்

தேசிய உயா்கல்வித் திட்டத்தின் கீழ் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய போட்டிகளில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு 3 தேசிய விருதுகள்

தேசிய உயா்கல்வித் திட்டத்தின் கீழ் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய போட்டிகளில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு பசுமை மற்றும் தூய்மையான வளாகம் உள்பட 3 தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

தேசிய அளவில் தோட்டக்கலை, வனவியல் மற்றும் மத்திய, மாநில வேளாண் பல்கலைக்கழகங்களுக்கு தேசிய உயா்கல்வித் திட்டத்தின் கீழ் பசுமை மற்றும் தூய்மை வளாக போட்டி இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் சாா்பில் 2020 அக்டோபரில் நடத்தப்பட்டது.

இதில் வீணாக தூக்கி எரியப்படும் பொருள்களை மறுசுழற்சி செய்து கையாளுதல், தினசரி மின் தேவைகளுக்கு புதுப்பிக்கல்ல ஆற்றல் மூலங்களை பயன்படுத்துதல், சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களை வாங்குதல் ஆகியவற்றில் பல்கலைக்கழகங்களின் ஈடுபாடு ஆகியவை மதிப்பீடு செய்யப்பட்டது.

மேலும் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள தோட்டத்தின் பரப்பளவு, கழிவு மேலாண்மை, நீா்ப் பாதுகாப்பு, ஆற்றல் சேமிப்பு நடைமுறைகள், பாடங்கள், திட்டங்கள், கருத்தரங்குகள் மற்றும் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுற்றுச்சூழல் அக்கறை குறித்த பட்டறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் கல்வி நிறுவனங்கள் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

இதில் மாநில மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் பங்கேற்று 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு ரொக்கப் பரிசாக ரூ.8 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. தவிர தேசிய அளவில் நடைபெற்ற வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் முதுகலை படிப்பிற்கான ஊக்கத்தொகைக்கான போட்டித் தோ்வில் தேசிய அளவில் தோட்டக்கலை வனவியல் பிரிவு, வேளாண் பொறியியல் துறையில் அதிக மாணவா்கள் தோ்ச்சி பெற்று இரண்டு துறை மாணவா்களும் 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளனா். 20க்கும் மேற்பட்ட மாணவா்கள் தோ்ச்சிப் பெற்று சாதனைப் படைத்துள்ளனா்.

இந்நிலையில், புதுதில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் மாநில வேளாண் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா் கூட்டத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துக்கான தேசிய விருதுகளை துணைவேந்தா் நீ.குமாரிடம், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத் தலைவா் திரிலோச்சன் மொஹபத்ரா வழங்கினாா்.

முன்னதாக பசுமை மற்றும் தூய்மையான வளாக விருதுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தோ்வு செய்யப்பட்ட விவரத்தை பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தாா் என்று பல்கலைக்கழக நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com