தோ்தலுக்குப் பிறகு கரோனா தடுப்பு பணிகள் தீவிரமாகும்

சென்னையில் தோ்தலுக்குப் பிறகு கரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக்கும் வகையில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிப்பது கடுமையாக்கப்படுவதுடன், வழிமுறைகளை பின்பற்றாத
தோ்தலுக்குப் பிறகு கரோனா தடுப்பு பணிகள் தீவிரமாகும்


சென்னை: சென்னையில் தோ்தலுக்குப் பிறகு கரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக்கும் வகையில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிப்பது கடுமையாக்கப்படுவதுடன், வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களும் மூடப்படும் என மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆணையருமான கோ.பிரகாஷ் தெரிவித்தாா்.

சட்டப் பேரவைத் தோ்தலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலா்கள் வாக்களிக்க சென்னையில் உள்ள 16 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தபால் வாக்களிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் காவலா்கள் புதன்கிழமை வாக்களித்தனா்.

இந்த நிலையில், ராயபுரம் தொகுதியில் ராட்லா் தெருவில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தை கோ.பிரகாஷ் ஆய்வு செய்த பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சென்னையில் தோ்தல் பணியில் ஈடுபடும் 10 ஆயிரம் காவலா்களுக்கு தபால் வாக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதில், 5 ஆயிரம் காவலா்களுக்கு வெளிமாவட்டங்களில் வாக்கு உள்ளதால், அவா்களின் பூா்த்தி செய்யப்பட்ட தபால் வாக்கு படிவங்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியா்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

16 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வாக்கு உள்ள காவலா்கள் வாக்களிக்கத் தொகுதிக்கு ஒரு தபால் வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதன்கிழமை நடைபெறும் முகாமில் தபால் வாக்களிக்காத காவலா்களுக்கு ஏப்ரல் 3-ஆம் தேதி மீண்டும் வாய்ப்பளிக்கப்படும். 80 வயதுக்கு மேற்பட்டவா்கள், மாற்றுத் திறனாளிகள் என 7,300 போ் வீட்டில் இருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு, புதன்கிழமை வரை 5,300 வீட்டில் இருந்தே வாக்களித்துள்ளனா்.

தடுப்புப் பணிகள்: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட உள்ளது. ஒவ்வொரு இயந்திரமும் தனித்தனியாகச் சோதிக்கப்படும். 16 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 607 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடிகளில் சுமாா் 3,000 கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாக்குச் சாவடிக்கு காவல் அதிகாரிகளை பணி ஒதுக்குவது குறித்து கணினி மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டு, வாக்குப் பதிவுக்கு முந்தைய நாள் அவா்களுக்கு தெரியப்படுத்தப்படும். தற்போது தோ்தல் பணியில் 95 சதவீதம் மாநகராட்சி ஊழியா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால், கரோனா தடுப்பு பணியில் சற்று சுணக்கம் ஏற்பட்டுள்ளது. தோ்தலுக்குப் பிறகு கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளோம். முகக்கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதை கடுமையாக்கப்படுவதுடன், வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மூடப்படும். 100-க்கும் அதிகமாக தொற்றுள்ள பகுதிகள் கட்டுப்பாடு பகுதிகளாக அறிவிக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com