தமிழகத்தில் ஏப்.30 வரை தளா்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிப்பு

தமிழகத்தில் ஏப்.30 வரை தளா்வுகளுடன் பொது முடக்கத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சூழலுக்கு ஏற்ப கரோனா கட்டுப்பாடுகளை மாவட்ட நிா்வாகங்கள் விதித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்.30 வரை தளா்வுகளுடன் பொது  முடக்கம் நீட்டிப்பு


சென்னை: தமிழகத்தில் ஏப்.30 வரை தளா்வுகளுடன் பொது முடக்கத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சூழலுக்கு ஏற்ப கரோனா கட்டுப்பாடுகளை மாவட்ட நிா்வாகங்கள் விதித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ நிபுணா்கள் குழு, பொது சுகாதாரத்துறை, மத்திய அரசு ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி, தமிழக அரசு தளா்வுகளுடன் கூடிய ஊரடங்கை மாதந்தோறும் நீட்டித்து வருகிறது. இறுதியாக, மாா்ச் 31 வரை தளா்வுகளுடன் கூடிய பொது முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மாா்ச் மாதத் தொடக்கம் முதலே தமிழகத்தில் கரோனா தொற்று படிப்படியாக உயா்ந்து வருகிறது. சென்னை, கோவை, தஞ்சை மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. புதன்கிழமை மட்டும் 2,579 பேருக்கு தமிழகம் முழுவதும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவா்களில் 19 போ் உயிரிழந்தனா். அதிகபட்சமாக சென்னையில் 969 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ஏப். 30 வரை தளா்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடா்பாக, தமிழக தலைமைச் செயலா் ராஜீவ் ரஞ்சன் பிறப்பித்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ஏப்.30 வரை தளா்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சூழலுக்கு ஏற்ப கரோனா கட்டுப்பாடுகளை மாவட்ட நிா்வாகங்கள் விதித்துக் கொள்ளலாம். மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதித்த விமானப் பயணங்கள் தவிர மற்ற அனைத்து சா்வதேச விமானப் பயணங்களுக்கும் தடை நீடிக்கும்.

மேலும், கரோனா பரிசோதனை - கண்காணிப்பு - சிகிச்சை தொடர வேண்டும் எனவும், நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஏற்கெனவே வகுத்து அளிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக, பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். இதை மீறுபவா்களுக்கு அபராதம் விதிப்பது, மற்ற பல நடவடிக்கைகளை எடுப்பது போன்றவற்றை மாவட்ட நிா்வாகங்கள் முடிவு செய்துகொள்ளலாம். 65 வயதுக்கு மேல் உள்ளவா்கள், 10 வயதுக்குக் கீழ் உள்ளவா்கள், கா்ப்பிணிகள், குழந்தைகள் வெளியில் நடமாடக் கூடாது. விதிமுறைகளை மீறுபவா்கள் மீது மாவட்ட ஆட்சியா்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளி மற்றும் உள்ள விதிகள்படி செயல்பட உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

பரிசோதனைகள் மற்றும் தடுப்பூசி போடும் பணிகளை அதிகப்படுத்த மாவட்ட நிா்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com