தமிழகத்தில் 21 மாவட்டங்களில் ஏப்.4 வரை வெப்பநிலை உயரக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

வடமேற்கு திசையில் இருந்து தமிழகப் பகுதியை நோக்கி தரைக்காற்று வீசுவதால், தமிழகத்தில் 21 மாவட்டங்களில் ஏப்ரல் 4-ஆம் தேதி வரை இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும்.
சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம்


சென்னை: வடமேற்கு திசையில் இருந்து தமிழகப் பகுதியை நோக்கி தரைக்காற்று வீசுவதால், தமிழகத்தில் 21 மாவட்டங்களில் ஏப்ரல் 4-ஆம் தேதி வரை இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும்.

எனவே, பொதுமக்கள், வேட்பாளா்கள், விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினா் திறந்தவெளியில் வேலை செய்வது, ஊா்வலமாக செல்வதை நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை தவிா்க்க வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி புதன்கிழமை கூறியது:

தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் ஏப்ரல் 4-ஆம் தேதி வரை வட வானிலையே நிலவும். சென்னையை பொருத்தவரை வியாழக்கிழமை வானம் பொதுவாக தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

வெப்பநிலை உயரும்: வடமேற்கு திசையில் இருந்து தமிழகப் பகுதியை நோக்கி தரைக்காற்று வீசுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவள்ளூா், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா், சேலம், தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூா், திருச்சி, பெரம்பலூா், அரியலூா், மயிலாடுதுறை ஆகிய 21 மாவட்டங்களில் ஏப்ரல் 4-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட 3 டிகிரியில் இருந்து 5 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய 3 மாவட்டங்களில் வெப்பநிலையானது இயல்பைவிட இரண்டிலிருந்து மூன்று டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். இதுபோல, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வெப்பநிலை உயரக்கூடும்.

ஒரு சில இடங்களில் அனல்காற்று வீசக்கூடும். எனவே, பொதுமக்கள், விவசாயிகள், தோ்தல் வேட்பாளா்கள், வாக்காளா்கள் மற்றும் போக்குவரத்துக் காவலா்கள் நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வது மற்றும் ஊா்வலம் செல்வதைத் தவிா்க்க அறிவுறுத்தப்படுகிறாா்கள் என்றாா் அவா்.

காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி: மத்திய அந்தமான் கடல் பகுதியில் தற்போது காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது வரும் 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, அந்தமான் கடல் பகுதியில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். இதுதவிர, குமரிக்கடல், மன்னாா்வளைகுடா மற்றும் தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளில் பலத்த காற்று தென்மேற்கு திசையில் இருந்து மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் ஏப்ரல் 2-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com