அரவக்குறிச்சியில் தேர்தலை ரத்து செய்க: அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம்

அரவக்குறிச்சியில் தேர்தலை ரத்து செய்யக்கோரி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை காலை அரை நிர்வாணத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரவக்குறிச்சியில் தேர்தலை ரத்து செய்யக்கோரி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் அரை நிர்வாணத்துடன் போராட்டம்
அரவக்குறிச்சியில் தேர்தலை ரத்து செய்யக்கோரி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் அரை நிர்வாணத்துடன் போராட்டம்


கரூர்: அரவக்குறிச்சியில் தேர்தலை ரத்து செய்யக்கோரி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை காலை அரை நிர்வாணத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அமர்ந்து சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறியது:  விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு லாபகரமான விலை கொடுக்கவில்லை எனக்கூறி நாங்கள் தில்லி சென்று 141 நாள்கள் போராடினோம். இதன்பிறகு உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் மோடி போட்டயிடும்போது 111 பேர் போட்டியிடுவோம் என்றோம். அப்போது அமித்ஷா, கோயல் ஆகியோர் எங்களை அழைத்துப்பேசி சிறு,குறு விவசாயிகள் அனைவருக்கும் ரூ.6,000 பென்சன் தருகிறோம், நதிகளை இணைக்க நாளையே அறிக்கை விடுத்து அதற்கான நிதிகளையும் ஒதுக்குகிறோம், நெல்லுக்கு இருமடங்கு லாபம் தருகிறோம் என்றனர். ஆனால் எதையும் அவர்கள் செய்யவில்லை.  அன்றைக்கு நெல்லுக்கான விலையில் இருமடங்காக ரூ.54 தருகிறோம் என்றனர். ஆனால் கொடுத்தது 88 பைசாத்தான். மேலும் கரும்பு டன்னுக்கு அன்று ரூ.2700 விற்றது. ரூ.8100 உயர்த்தி தருவதாக கூறினார்கள். ஆனால் ஏற்றிக்கொடுத்தது ரூ.150. இதனால் மத்திய அரசு எங்களை ஏமாற்றிவிட்டது. 

மத்திய அரசின் பாஜக அரவக்குறிச்சியில் போட்டியிடுவதால் அவர்களை எதிர்த்து போட்டியிட சட்டையில்லாமல் நாங்கள் சென்றோம். ஆனால் சட்டையில்லாமல் சென்றதற்காக வேட்புமனுத்தாக்கல் செய்ய விடாமல் காவல்துறையினர் தடுத்துவிட்டனர். முதன்மை தேர்தல் அதிகாரியை சந்தித்து இதுதொடர்பாக கேட்டபோது, சட்டையில்லாமல் சென்று தாக்கல் செய்யக்கூடாது என யார் சொன்னார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறேன் என்றார். 

இந்நிலையில் நாங்கள் கரூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று வருகிறோம் எனக்கூறிய நிலையில் ஆட்சியர், எஸ்பி இடமாற்றம் செய்யப்பட்டதாக தெரிவித்தார்கள்.

ஜனநாயக நாட்டில் சட்டை இல்லாமல் போகக்கூடாதா. 60 கிலோ நெல் ரூ.40-க்கு விற்றபோது, ஒரு எம்எல்ஏவுக்கு சம்பளம் ரூ.250 சம்பளம். இப்போது அவருக்கு ரூ.1.04 லட்சம் சம்பளம், வங்கி மேலாளருக்கு அன்றுக்கு ரூ.150 சம்பளம், இன்றைக்கு ரூ.1.25 லட்சம் சம்பளம். ஆனால் விவசாயிகளுக்கு என்ன லாபம் கிடைக்கிறது. எங்கள் சட்டை, வேஷ்டிகள் அனைத்தும் பிடுங்கிவிட்டார்கள் அல்லவா. இதனால்தான் சட்டை வேஷ்டி இல்லாமல் சென்றோம். 

எங்களை அரவக்குறிச்சி தொகுதியில் வேட்புமனுத்தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும். இல்லையேல் அங்கு தேர்தலை ஒத்திவைக்க வேண்டும். அதுதான் எங்கள் கோரிக்கை. காவிரியில் கர்நாடகா 5.90 லட்சம் ஏக்கரில்தான் அன்றக்கு சாகுபடி செய்தது. இப்போது 36 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்கிறது.

 தமிழகத்தில் 30 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்தோம், இப்போது 10 லட்சம் ஏக்கராக  சுருங்கிவிட்டது. மேகதாது அணைக்கட்டப்பட்டால் வெறும் 5 லட்சம் ஏக்கராக குறைந்துவிடும். 

அரவக்குறிச்சியில் தேர்தலை ஒத்திவைத்து, வேட்புமனு தாக்கல் செய்ய சென்ற எங்களை தடுத்தவர்கள் மீது நடவடிக்கை  எடுக்க வேண்டும். இதற்கு சரியான பதில் இல்லையென்றால் சென்னை தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் படுத்து போராட்டம் நடத்துவோம். 

மதுரைக்கு வந்த காந்தி விவசாயிகளை பார்த்துதான் சட்டையில்லாமல் எஞ்சிய வாழ்க்கை நடத்தினார். நாங்கள் சட்டையில்லாமல் வேட்பு மனுத்தாக்கல் செய்ய சென்றது தவறா என்றார் அய்யாக்கண்ணு.  போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com