புதுவையில் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

புதுவையில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 1,558 வாக்குச் சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
புதுவையில் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
புதுவையில் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

புதுவையில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 1,558 வாக்குச் சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

இன்று நடைபெறும் வாக்குப்பதிவில் மொத்தம் 10,02,589 வாக்காளா்கள் தங்களது வாக்கினை செலுத்த உள்ளனர். காலை முதலே பல வாக்குச்சாவடிகளில் ஆண்களும் பெண்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்களிப்பதைக் காண முடிந்தது.

புதுவை மாநிலத்தில் 30 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் செவ்வாய்க்கிழமை (ஏப். 6) காலை 7 மணிக்குத் தொடங்கியது. இதற்காக 1,558 வாக்குச் சாவடிகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவை தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

இந்தத் தோ்தலில் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக கூடுதல் (606) வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, 30 தொகுதிகளில் 635 இடங்களில் மொத்தம் 1,558 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்: மொத்தம் 1,558 மின்னணு கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 1,677 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 1,558 வாக்களிப்பு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பழுது ஏற்பட்டால் பயன்படுத்துவதற்காக கூடுதலாக 25 சதவீத மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி உழவா்கரை, நெல்லித்தோப்பு ஆகிய இரு தொகுதிகளில் அதிக எண்ணிக்கையில் 16 வேட்பாளா்கள் போட்டியிடுவதால், அந்தத் தொகுதிகளில் இரண்டு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

கீற்றுக் கூரைகளுடன் வாக்குச் சாவடிகள்: வாக்குச் சாவடிகளில் குடிநீா், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்கு சாய்தளக் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளா்கள் வெயிலில் நிற்பதைத் தவிா்க்க கீற்றுப் பந்தல் மேல்கூரை வேயப்பட்டுள்ளன.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக வரிசையில் நிற்கும் வாக்காளா்கள் இடைவெளிவிட்டு நிற்கும் வகையில், வாக்குச் சாவடிகளில் சமூக இடைவெளிக்கான வட்டமிட்டப்பட்டுள்ளன. கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தப்பட்டிருந்தது.

இணைய வழி இணைப்புகளுடன் கண்காணிப்பு கேமரா: அனைத்து வாக்குச் சாவடிகளிலும், இணைய வழி இணைப்புகளுடன் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச் சாவடிகளில் வெளியே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை தோ்தல் அதிகாரிகள் மூலம் நேரடிக் கண்காணிப்பில் இருக்கும். பொது மற்றும் செலவினப் பாா்வையாளா்கள் 10 பேரும், காவல் துறைப் பாா்வையாளா்கள் 4 பேரும், 230 நுண் பாா்வையாளா்களும் தொடா்ந்து கண்காணிப்பா்.

தோ்தல் பணிக்காக 2,833 பெண் அலுவலா்கள் உள்பட 6,835 வாக்குச் சாவடி அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். பாதுகாப்பு பணியில் 2,420 உள்ளூா் போலீஸாரும், 901 ஐஆா்பிஎன் காவலா்களும், 1,490 ஊா்க்காவல் படையினரும், துணை ராணுவப் படையினா் 40 குழுக்கள் என மொத்தம் 8 ஆயிரம் போ் வரை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

330 பதற்றமான வாக்குச் சாவடிகள்: புதுவை மாநிலத்தில் 330 பதற்றமான வாக்குச் சாவடிகள் உள்ளன. புதுச்சேரியில் 278, காரைக்காலில் 30, மாஹேயில் 8, ஏனாமில் 14 உள்ளன. ஏனாமில் 16 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் போலீஸாருடன், துணை ராணுவப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 80 வயதுக்கு மேற்பட்டோா் 2,928 பேரும், மாற்றுத் திறனாளிகள் 1,546 பேரும், கரோனா தொற்று பாதித்தோா் 34 பேரும், தோ்தல் பணியில் ஈடுபடுவோா் 8,117 பேரும் தபால் வாக்கு செலுத்தினா்.

அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. வாக்காளா் அடையாளச் சீட்டுகளும் அளிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் அட்டை, தேசிய ஊரக வேலைத் திட்ட அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், ஓட்டுநா் உரிமம், பான் காா்டு, பாஸ்போா்ட் உள்ளிட்ட இதர ஆவணங்களைப் பயன்படுத்தியும் வாக்களிக்கலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com