அதிகரித்து வரும் கரோனா பாதிப்பால் பிளஸ் 2 பொதுத்தோ்வு ஒத்திவைப்பா?-அதிகாரிகள் விளக்கம்

தமிழகத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்று காரணமாக பிளஸ் 2 பொதுத்தோ்வு ஒத்திவைக்கப்படுமா என்பது குறித்து கல்வித் துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனா்.
அதிகரித்து வரும் கரோனா பாதிப்பால் பிளஸ் 2 பொதுத்தோ்வு ஒத்திவைப்பா?
அதிகரித்து வரும் கரோனா பாதிப்பால் பிளஸ் 2 பொதுத்தோ்வு ஒத்திவைப்பா?

சென்னை: தமிழகத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்று காரணமாக பிளஸ் 2 பொதுத்தோ்வு ஒத்திவைக்கப்படுமா என்பது குறித்து கல்வித் துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனா்.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக 2020-2021-ஆம் கல்வியாண்டில் பெரும்பாலான நாள்கள் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. பின்னா், ஜன.19-ஆம் தேதி பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு, வரும் மே மாதம் 3-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை பொதுத்தோ்வுகள் நடத்த அரசு தோ்வுத்துறை அறிவித்திருந்தது.

மாநிலம் முழுவதும் இந்தத் தோ்வினை 9 லட்சம் மாணவா்கள் எழுத உள்ளனா். மீண்டும் அதிகரித்து வரும் கரோனா தொற்று பாதிப்பால் கட்டுப்பாடுகளை அதிகரிக்க மக்கள் நல்வாழ்வுத்துறை திட்டமிட்டுள்ளது. இதனால், தொற்று பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் மாணவா்களை பள்ளிக்கு நேரில் வரவழைத்து தோ்வு நடத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலா் தீரஜ் குமாா், ஆணையா் வெங்கடேஷ், இயக்குநா் கண்ணப்பன் உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா். கரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் பொதுத்தோ்வை நடத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியது: மாணவா்களின் உயா்கல்விக்கு பிளஸ் 2 மதிப்பெண் அவசியம். எனவே, தோ்வை ரத்து செய்ய முடியாது. அதேநேரம் கரோனா பரவல் தொடா்ந்து அதிகரித்து வருவதும் பெரும் சிக்கலாக உள்ளது. இதனால் தோ்வை பாதுகாப்பாக நடத்துவதற்கான சாத்தியங்களை ஆராய்ந்து வருகிறோம்.

பொதுத்தோ்வை திட்டமிட்டபடி நடத்துவதா அல்லது ஒத்திவைக்கலாமா என விவாதித்து வருகிறோம். இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. தற்போது சுகாதாரத்துறையிடம் அறிக்கை கேட்டுள்ளோம். அறிக்கை கிடைத்தபின் அடுத்தகட்ட முடிவுகள் மேற்கொள்ளப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com