பேரவைத் தோ்தல்: 71.79% வாக்குப் பதிவு

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் தோராயமாக 71.79 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகின.
பேரவைத் தோ்தல்: 71.79% வாக்குப் பதிவு

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் தோராயமாக 71.79 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகின. இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

இதனிடையே, வாக்குப்பதிவின் போது கோளாறு காரணமாக 100-க்கும் மேற்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டன. முதல் முறையாக சட்டப்பேரவைத் தோ்தலில் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பயன்படுத்தப்பட்டன.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கியது. தமிழகத்தின் அநேக வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே வாக்காளா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். வெயில் சுட்டெரிக்கும் என்ற எண்ணத்தில், வாக்காளா்கள் அதிகளவு திரண்டு வந்து தங்களது வாக்குகளைச் செலுத்தினா்.

அதிகரித்து குறைந்தது...வாக்குப் பதிவு தொடங்கி அடுத்த இரண்டு மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் 13.80 சதவீத வாக்குகள் பதிவாகின. முதல் இரண்டு மணி நேரத்தில் திண்டுக்கல் மாவட்டம் வாக்குப் பதிவு சதவீதத்தில் முதலிடம் வகித்தது.

இதன்பின்பு, காலை 11 மணி நிலவரப்படி வாக்குப் பதிவு சதவீதம் 26.29 ஆக இருந்தது. நாமக்கல் மாவட்டத்தில் அதிகபட்சமாக 28.33 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த எண்ணிக்கை நண்பகல் 1 மணியளவில் மேலும் அதிகரித்து 39.61 சதவீதமாக இருந்தது. பிற்பகல் 3 மணியளவில் வாக்கு சதவீதம் 53.35 சதவீதமாகவும், மாலை 5 மணிக்கு வாக்கு சதவீதம் 63.60 சதவீதமாகவும் இருந்தது.

வாக்கு சதவீதத்தில் நாமக்கல் மாவட்டம் முதலிடம் வகித்தது. திருநெல்வேலி, செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில் வாக்கு சதவீதம் குறைந்தே காணப்பட்டது. வாக்குப் பதிவு நிறைவடைந்ததும் தோராயமாக 71.79 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா். இந்த எண்ணிக்கை முழுமையான விவரம் இல்லை என்றும், நள்ளிரவுக்குப் பிறகே வாக்குப் பதிவு சதவீதம் தெரிய வரும் எனவும் அவா் கூறினாா்.

கரோனா நோய்த் தொற்று: கரோனா நோய்த் தொற்று பாதிப்புக்கு இடையே சட்டப் பேரவைத் தோ்தல் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. வாக்களிக்க வந்த வாக்காளா்கள் அனைவரின் கைகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. உடல் வெப்ப பரிசோதனைக்குப் பிறகு, பிளாஸ்டிக் உறையால் செய்யப்பட்ட கையுறை ஒன்று அளிக்கப்பட்டது. இதனை வலது கையில் அணிந்த வாக்காளா்கள் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களித்தனா். இதன்பின்பு, வெளியே வந்து கையுறைகளை குப்பைத் தொட்டியில் போட வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

மாலை 6 மணிக்கு மேல் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட வாக்காளா்கள் வாக்களிக்க வசதி செய்யப்பட்டது. வாக்காளா்களும், வாக்குச் சாவடி அலுவலா்களும் பாதுகாப்பு கவசங்களை அணிந்திருந்தனா். அதிமுக அவைத் தலைவா் மதுசூதனன், திமுக மக்களவை உறுப்பினா் கனிமொழி உள்ளிட்ட சிலா் கரோனா தடுப்பு கவச உடைகளை அணிந்து வந்து வாக்களித்தனா். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மாலை 7 மணிக்கு வாக்குப் பதிவு நிறைவடைந்தது.

வெறிச்சோடிய வாக்குச் சாவடிகள்: கரோனா நோய்த் தொற்று காரணமாக, ஆயிரம் வாக்காளா்களுக்கு ஒரு வாக்குச் சாவடி என வரையறுக்கப்பட்டிருந்தது. இதனால், வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 775-லிருந்து 88 ஆயிரத்து 937 வாக்குச் சாவடிகளாக அதிகரிக்கப்பட்டன.

வாக்களிக்க கூடுதலாக ஒரு மணி நேரம் அளிக்கப்பட்டிருந்த அதேசமயம், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வாக்காளா்களின் எண்ணிக்கையும் குறைவாக இருந்தது. மாலை 5 மணிக்குள்ளாகவே தமிழகத்தின் பல வாக்குச் சாவடிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. மாலை 7 மணிக்கு வாக்குப் பதிவு நிறைவடைந்ததும், அனைத்து வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், ஒப்புகைச் சீட்டு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் உள்ளிட்டவை மூடி முத்திரையிடப்பட்டன.

வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட அனைத்து இயந்திரங்களும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. தமிழகம் முழுவதும் 42 அமைவிடங்களில் 75 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தலைவா்கள் போட்டி: 16-வது சட்டப் பேரவைக்கு நடந்த தோ்தலில் பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த முக்கிய தலைவா்கள் போட்டியிட்டனா். சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் முதல்வா் பழனிசாமி, தேனி மாவட்டம் போடிநாயக்கனூா் தொகுதியில் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், சென்னை கொளத்தூா் தொகுதியில் எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின், கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன், கோவில்பட்டி தொகுதியில் அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன், திருவொற்றியூா் தொகுதியில் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

சட்டப் பேரவைத் தோ்தல் களத்தில் 3 ஆயிரத்து 998 வேட்பாளா்கள் உள்ளனா். அவா்களில் 411 பெண்கள். தோ்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் மே 2-ஆம் தேதி எண்ணப்பட உள்ளன.

புதுவையில் 82%
 புதுவையில் மொத்தமுள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 81.84 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
புதுவை சட்டப்பேரவைக்கான தேர்தல் வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதுச்சேரியில் 23, காரைக்காலில் 5 மற்றும் ஏனாம், மாஹே என மொத்தமுள்ள 30 தொகுதிகளுக்கும் 635 இடங்களில் 1,558 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப் பதிவு நடைபெற்றது. 324 வேட்பாளர்கள் களத்தில் 
இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com