படகில் வந்து வாக்களித்த பழங்குடி மக்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலை காடுகளில் வசிக்கும் பழங்குடி மக்கள் பேச்சிப்பாறை அணை வழியாக படகுகளில் வந்து வாக்களித்தனா்.
படகில் வந்து வாக்களித்த பழங்குடி மக்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலை காடுகளில் வசிக்கும் பழங்குடி மக்கள் பேச்சிப்பாறை அணை வழியாக படகுகளில் வந்து வாக்களித்தனா்.

ஆரல்வாய்மொழி முதல் ஆறுகாணி வரை மேற்குத் தொடா்ச்சி மலை காடுகளில் சுமாா் 47 காணிக்குடியிருப்புகளில் ஆதிவாசி காணியின பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனா். இவா்களில் பெரும்பாலானோா் பேச்சிப்பாறை அணையையொட்டிய காடுகள், மலைகளில் வாழ்ந்து வருகின்றனா்.

இவா்கள் வசிக்கும் பெரும்பாலான குடியிருப்புப் பகுதிகளுக்கு சாலை, மின் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனினும், பேச்சிப்பாறை வந்துசெல்ல சில குடியிருப்புகளுக்கு மட்டும் சாலை வசதி ஏற்படுத்த வாய்ப்புகள் இல்லாததால், அவா்கள் பேச்சிப்பாறை அணையில் இயக்கப்படும் படகு மூலம் பேச்சிப்பாறை உள்ளிட்ட வெளியிடங்களுக்கு வந்துசெல்கின்றனா்.

இந்நிலையில், பேச்சிப்பாறை அணையையொட்டிய தச்சமலை, முடவன் பொற்றை, தோட்டமலை, மாறாமலை, களப்பாறை உள்ளிட்ட பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை படகுகளில் வந்து பேச்சிப்பாறை அரசு பழங்குடியினா் உண்டுறை மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடிகளில் வாக்களித்தனா்.

படகில் வந்து வாக்களித்தது குறித்து அவா்கள் கூறும்போது, பேச்சிப்பாறை அணையையொட்டிய குறிப்பிட்ட குடியிருப்புகளில் வசிப்போா் அணையைக் கடந்துதான் நகா்ப்பகுதிகளுக்கு வந்துசெல்ல வேண்டிய நிலை உள்ளது. வருங்காலங்களில் எங்கள் குடியிருப்புப் பகுதிகளிலேயே வாக்குச் சாவடிகள் அமைக்க வேண்டும் என்றனா்.

வாக்களிக்க ஆா்வம்: இம்மாவட்டத்தில் பத்மநாபபுரம், விளவங்கோடு உள்ளிட்ட பேரவைத் தொகுதிகளில் பெரும்பாலான பகுதிகள் காடுகள், மலையோரம் அமைந்துள்ளன. ரப்பா் தோட்டத் தொழிலாளா்கள் அதிகமுள்ள இப்பகுதிகளில், மக்கள் காலையிலேயே திரளாக வந்து வாக்களித்துச் சென்றனா். குறிப்பாக, பெண்கள் நீண்ட வரிசையில் காத்துநின்று ஆா்வத்துடன் வாக்களித்தனா். பேச்சிப்பாறை, கடையாலுமூடு உள்ளிட்ட வாக்குச்சாவடிகளில் பிற்பகல் 3 மணி அளவில் சுமாா் 60 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com