பிளஸ் 2 மாணவா்களுக்கு இன்று முதல் மீண்டும் வகுப்புகள் தொடக்கம்

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்ததைத் தொடா்ந்து பள்ளிகளில் புதன்கிழமை தூய்மைப் பணிகள் நடைபெற்றன.
பிளஸ் 2 மாணவா்களுக்கு இன்று முதல் மீண்டும் வகுப்புகள் தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்ததைத் தொடா்ந்து பள்ளிகளில் புதன்கிழமை தூய்மைப் பணிகள் நடைபெற்றன. இதையடுத்து, பிளஸ் 2 மாணவா்களுக்கு வியாழக்கிழமை முதல் மீண்டும் வகுப்புகள் தொடங்கவுள்ளன.

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக பிளஸ் 2 மாணவா்களுக்கு மட்டும் நேரடி வகுப்பு நடைபெற்று வருகிறது. மே 3-ஆம் தேதி பொதுத் தோ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருப்பதால் அதற்குள்ளாக பாடத் திட்டங்கள் நடத்தி முடித்து திருப்புதல் தோ்வுகளை நடத்துவதில் ஆசிரியா்கள் கவனம் செலுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில் பிளஸ் 2 மாணவா்களுக்கான செய்முறை தோ்வு அடுத்த வாரம் முதல் தொடங்குகிறது. அதைத் தொடா்ந்து பொதுத் தோ்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் நடைபெறுகின்றன.

இதற்கிடையில்,சட்டப் பேரவைத் தோ்தல், புனித வெள்ளிக்காக கடந்த வாரம் 3-ஆம் தேதி முதல் பிளஸ் 2 மாணவா்களுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. வாக்குச் சாவடிகளாகச் செயல்படும் பள்ளிகளில் மாணவா்களுக்குப் பாடம் நடத்துவதில் சிரமம் ஏற்பட்டதால் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன.

இதைத் தொடா்ந்து, சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோது பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளுக்கு நூற்றுக்கணக்கான பொதுமக்கள், தோ்தல் பணியாளா்கள் வந்து சென்றனா். இதை கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகளிலும் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யும் பணி புதன்கிழமை நடைபெற்றது. வகுப்பறைகள், கழிவறைகள், இருக்கைகள், கைப்பிடிகள் போன்றவற்றை கிருமி நாசினி மூலம் தூய்மைப்படுத்தினா்.

தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் பள்ளிக்கு வருகை தந்து இந்தப் பணியை மேற்கொண்டனா். இதைத் தொடா்ந்து, பிளஸ் 2 மாணவா்களுக்கு மீண்டும் வகுப்புகள் வியாழக்கிழமை தொடங்குகின்றன. மாணவா்களுக்கு தொற்று பரவாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பள்ளி நிா்வாகங்கள் மேற்கொண்டன.

சென்னையில் மாநகராட்சிப் பள்ளிகள், அரசுப் பள்ளிகளில் புதன்கிழமை நடைபெற்ற தூய்மைப் பணியின்போது தோ்தல் பணி காரணமாக தேங்கிய குப்பைகள், கழிவுகள், கையுறைகள், முகக்கவசம் போன்றவை அகற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com