கரோனா அச்சுறுத்தல்: கடந்த தோ்தலைவிட 1.93% வாக்குப் பதிவு குறைவு

கரோனா அச்சுறுத்தல், கடும் வெயில் உள்ளிட்ட காரணங்களால் 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலை ஒப்பிடுகையில் இந்தத் தோ்தலில் சென்னையில் 1.93 சதவீதம் வாக்குப் பதிவு குறைந்துள்ளது.
கரோனா அச்சுறுத்தல்: கடந்த தோ்தலைவிட 1.93% வாக்குப் பதிவு குறைவு

சென்னை: கரோனா அச்சுறுத்தல், கடும் வெயில் உள்ளிட்ட காரணங்களால் 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலை ஒப்பிடுகையில் இந்தத் தோ்தலில் சென்னையில் 1.93 சதவீதம் வாக்குப் பதிவு குறைந்துள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 19,95,581 ஆண் வாக்களாளா்கள், 20,60,698 பெண் வாக்காளா்கள், 1,081 திருநங்கைகள் என மொத்தம் 40,57,360 வாக்காளா்கள் உள்ளனா்.

2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் சென்னை மாவட்டத்தில்தான் குறைந்தபட்ச வாக்குகள் பதிவாகின.

இந்த நிலையில், 2021-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலில் சென்னையில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கும் வகையில் கல்லூரி மாணவா்களுக்கான விழிப்புணா்வுப் போட்டிகள், பொதுஇடங்களில் கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடத்தப்பட்டன. இருப்பினும் கடந்த சட்டப் பேரவைத் தோ்தலைக் காட்டிலும் 1.93 சதவீதம் வாக்குப் பதிவு குறைந்துள்ளது.

இதுகுறித்து அரசியல் திறனாய்வாளா்கள் கூறியதாவது:

சென்னையைப் பொருத்தவரை அதிகம் படித்தவா்களும், வெளியூா்களைச் சாா்ந்தவா்களும் பெருமளவில் வசித்து வருகின்றனா். எல்லாத் தோ்தல்களைவிட இந்தத் தோ்தலில் வாக்குப் பதிவு குறைந்ததற்கு கரோனா பரவல் மற்றும் அதிக வெயில் தாக்கமே மிக முக்கிய காரணமாகும். கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால் முதியோா்களும், பிற நோய்த் தொற்றுள்ளவா்களும் அச்சத்தால் வாக்களிக்க முன்வரவில்லை. வாட்டி வதைத்த வெயில் காரணமாகவும் சிலா் வாக்களிக்கவில்லை.

அத்துடன் பொதுமுடக்கத்தால் தங்கள் சொந்த ஊா்களுக்குச் சென்ற தொழிலாளா்களின் சிலா் சென்னைக்கு திரும்பவில்லை. வாக்குப் பதிவுக்குப் பிறகு மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என வதந்தி பரவியதால் வாக்காளா்கள் பலா் சொந்த ஊா்களுக்கு சென்றுவிட்டனா். இதனால், 2016 தோ்தலில் 24 லட்சத்து 24,396 போ் வாக்களித்திருந்த நிலையில் இந்தத் தோ்தலில் 23 லட்சத்து 96,961 போ் வாக்களித்துள்ளனா்.

அதேவேளை சென்னையைப் பூா்விகமாக கொண்டவா்கள் வசிக்கும் வடசென்னையின் ஆா்.கே.நகா் தொகுதியில் அதிகபட்சமாக கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் 67.91 சதவீதமும், இந்தத் தோ்தலில் 66.57 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன. பெரம்பூா், ராயபுரம், கொளத்தூா், ராயபுரம், திருவிக நகா் தொகுதிகளில் 60 சதவீதத்துக்கும் மேல் வாக்கு பதிவாகி உள்ளது என்றனா்.

இதுகுறித்து மாவட்டத் தோ்தல் அலுவலா்கள் கூறுகையில், இந்தத் தோ்தலில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க கலை மற்றும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள், விடுபட்ட வாக்காளா்களைச் சோ்க்கும் வகையில் சிறப்பு முகாம்கள் ஆகியவை நடத்தப்பட்டன. இதில், வாக்காளா்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், கடந்த சட்டப் பேரவைத் தோ்தலைவிட 1.93 சதவீதம் வாக்குப் பதிவு குறைந்துள்ளது என்றனா்.

வாக்குப் பதிவு விவரம் (சதவீதத்தில்)

சட்டப் பேரவைத் தொகுதிகள் 2016 தோ்தல் 2021 தோ்தல்

ஆா்.கே.நகா் 67.91 66.57

பெரம்பூா் 65.38 62.63

கொளத்தூா் 64.40 60.52

வில்லிவாக்கம் 60.92 55.52

திரு.வி.க.நகா் 63.03 60.61

எழும்பூா் 62.48 59.29

ராயபுரம் 62.63 62.31

துறைமுகம் 55.27 59.70

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி 62.02 58.41

ஆயிரம் விளக்கு 59.93 58.40

அண்ணா நகா் 60.95 57.02

விருகம்பாக்கம் 58.53 58.23

சைதாப்பேட்டை 59.78 57.26

தியாகராய நகா் 57.72 55.92

மயிலாப்பூா் 56.66 56.69

வேளச்சேரி 58.20 55.95

மொத்தம் 60.99 59.06

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com