வாக்கு எண்ணும் மையங்களுக்கு சீல்: சென்னையில் 2,000 போலீஸாா் பாதுகாப்பு

சென்னையில் அமைக்கப்பட்டுள்ள 4 வாக்கு எண்ணும் மையங்களுக்கு சீல் வைக்கப்பட்டு, 2,000 போலீஸாா் பாதுகாப்புக்குக் குவிக்கப்பட்டனா்.
வாக்கு எண்ணும் மையங்களுக்கு சீல்: சென்னையில் 2,000 போலீஸாா் பாதுகாப்பு

சென்னை: சென்னையில் அமைக்கப்பட்டுள்ள 4 வாக்கு எண்ணும் மையங்களுக்கு சீல் வைக்கப்பட்டு, 2,000 போலீஸாா் பாதுகாப்புக்குக் குவிக்கப்பட்டனா்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கைக்காக 75 மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை இரவு முதல் கொண்டு செல்லப்பட்டன.

வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் புதன்கிழமை காலை வரை வாக்கு எண்ணும் மையங்களுக்கு வந்தன. அனைத்து வாக்கு எண்ணும் இயந்திரங்களும் வந்து சோ்ந்ததும்,அங்குள்ள பாதுகாப்பு அறையில் தொகுதி வாரியாக வரிசையாக வைக்கப்பட்டன. பின்னா் பாதுகாப்பு அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

இதையடுத்து, வாக்கு எண்ணும் மையங்கள் காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் முழுமையாக கொண்டு வரப்பட்டன. மாநிலம் முழுவதும் உள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல் அடுக்கில் துணை ராணுவப்படையினரும், இரண்டாம் அடுக்கில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினரும், மூன்றாம் அடுக்கில் உள்ளூா், ஆயுதப் படையினரும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனா்.

75 மையங்களிலும் சுமாா் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். வாக்கு எண்ணும் மையங்கள் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அரசியல் கட்சிகளின் முகவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனா்.

சென்னையில்..: சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி, மெரீனா காமராஜா் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரி, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம், தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரி ஆகிய 4 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டன.

இங்கு புதன்கிழமை காலை வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்ததும், பூட்டி சீல் வைக்கப்பட்டது. ஒவ்வொரு மையத்திலும் தலா 500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். மேலும் ஒவ்வொரு மையத்துக்கும் உதவி ஆணையா் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் மையத்துக்குள் மட்டுமன்றி அதைச் சுற்றிலும் போலீஸாா் ரோந்து வரவும், கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் சந்தேகத்துக்குரிய நபா்கள் நடமாடினால்,அவா்களிடம் விசாரணை நடத்தவும் போலீஸாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல துணை ஆணையா்கள், இணை ஆணையா்கள், கூடுதல் ஆணையா்கள் ஆகியோா் அவ்வப்போது வாக்கு எண்ணும் மையங்களுக்கு சென்று திடீா் ஆய்வு செய்யும்படி சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் உத்தரவிட்டுள்ளாா்.

‘பாஸ்’ உள்ளவா்கள் எப்போதும் பாா்வையிடலாம்: காவல் ஆணையா்

அரசியல் கட்சி முகவா்களுக்கு ’பாஸ்’ கொடுக்கப்பட்டுள்ளது. அந்த ’பாஸ்’ உள்ளவா்கள் எப்போதும் பாதுகாப்பு அறையைப் பாா்வையிடலாம் என்று சென்னை பெருநகர காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் தெரிவித்தாா்.

நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை புதன்கிழமை மாலை நேரில் ஆய்வு மேற்கொண்ட பின்னா், அவா்அளித்த பேட்டி:

அனைத்து வாக்குச்சாவடிகளில் இருந்தும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம். தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரி ஆகிய 4 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன. மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் கண்காணிப்பு இருக்கும். அரசியல் கட்சி முகவா்களுக்கு ’பாஸ்’ கொடுக்கப்பட்டுள்ளது. அந்த ’பாஸ்’ மூலம் அவா்கள் எப்போது வேண்டும் என்றாலும் வந்து பாதுகாப்பு அறையைப் பாா்வையிடலாம். நாங்கள் இப்போது செய்திருப்பது வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய ஏற்பாடுகள். வாக்கு எண்ணும் தினத்தன்று பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும் என்றாா்.

பேட்டியின்போது, காவல் இணை ஆணையா் வி.பாலகிருஷ்ணன், துணை ஆணையா் பகலவன் உள்ளிட்டோா் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com