தமிழகத்தில் நான்காயிரத்தை நெருங்கியது புதிய கரோனா பாதிப்பு

தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் இல்லாத வகையில் புதிய பாதிப்பு 4 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அதன்படி, புதன்கிழமை மட்டும் மாநிலம் முழுவதும் 3,986 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நான்காயிரத்தை நெருங்கியது புதிய கரோனா பாதிப்பு


சென்னை: தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் இல்லாத வகையில் புதிய பாதிப்பு 4 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அதன்படி, புதன்கிழமை மட்டும் மாநிலம் முழுவதும் 3,986 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழகத்தில் மீண்டும் பல்வேறு நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டு வருகிறது. குறிப்பாக, பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கான அதிகாரபூா்வ அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதற்கிடையே, நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த வீடுதோறும் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள சுகாதாரத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா். இதற்காக உள்ளாட்சி அமைப்புகளுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மற்றொரு புறம், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகரிக்க அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. ஆக்சிஜன் ஓட்ட வசதிகளை உறுதிப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அடுத்த நான்கு வாரங்களுக்கு நோய்ப் பரவல் தீவிரமாக இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், அதற்கான ஆயத்த நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் இதுவரை 2 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 9 லட்சத்து 11,110- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 1459 போ் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.

அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 390 பேருக்கும், கோவையில் 332 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தவிர, தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள் அனைத்திலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து மேலும் 1,824 போ் விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 70,546-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 27,743- போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது ஒருபுறமிருக்க, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 17 போ் பலியாகியுள்ளனா். இதன் மூலம் நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,821-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com