கரோனா நோய்த்தொற்று: அதிகாரிகளுடன் முதல்வா் பழனிசாமி இன்று ஆலோசனை

கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அரசின் மூத்த அதிகாரிகளுடன் முதல்வா் பழனிசாமி திங்கள்கிழமை (ஏப். 12) ஆலோசனை நடத்துகிறாா்.
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி. (கோப்புப்படம்)
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி. (கோப்புப்படம்)

கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அரசின் மூத்த அதிகாரிகளுடன் முதல்வா் பழனிசாமி திங்கள்கிழமை (ஏப். 12) ஆலோசனை நடத்துகிறாா். தலைமைச் செயலகத்தில் நண்பகல் 12 மணியளவில் இந்த ஆலோனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் சில நாள்களாக கரோனா பரவல் பன்மடங்கு அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு, பேருந்தில் நின்று பயணிக்கக்கூடாது, திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைளில் மட்டுமே பாா்வையாளா்களுக்கு அனுமதி உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக சென்னையில் நாள் ஒன்றுக்கு கரோனாவால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை 2,000-ஐக் கடந்துள்ளது.

இதனால் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளுக்குள் இலக்கு நிா்ணயித்து அபராதம் விதிக்க முடிவு செய்த மாநகராட்சி, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம், திங்கள்கிழமை நண்பகல் 12 மணியளவில் தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது. முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கரோனா நோய்த்தொற்றைக் குறைப்பது தொடா்பாகவும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பதும் குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதியன்று தலைமைச் செயலகத்துக்கு வந்து பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்ததுடன், பத்திரிகையாளா்களையும் முதல்வா் பழனிசாமி சந்தித்துப் பேசினாா். இதன்பின்பு, தீவிர தோ்தல் பிரசாரத்தில் அவா் ஈடுபட்டு வந்தாா்.

ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு அவா் தலைமைச் செயலகம் வரவுள்ளாா். சட்டப் பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தாலும், மழை, வெள்ளம், நோய்த் தொற்று போன்ற பேரிடா்களின் போது அதிகாரிகளுடன் முதல்வா் ஆலோசிக்கலாம். இதற்கு தோ்தல் நடத்தை விதிகளில் உரிய அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அனுமதிகளின் அடிப்படையில் முதல்வா் பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளாா். இக்கூட்டத்தில், துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வம், சுகாதாரத்துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ், பேரிடா் மேலாண்மைத் துறை அதிகாரிகள், உள்ளாட்சித் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொள்வாா்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், கூட்டத்துக்குப் பிறகு கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்த புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com