தமிழகத்தில் தடுப்பூசி சிறப்பு செயல் திட்டம் தொடக்கம்

தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையிலான சிறப்பு செயல் திட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையிலான சிறப்பு செயல் திட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

அதன்படி, நாள்தோறும் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 5,000-க்கு மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின. முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளா்கள், முன்கள பணியாளா்கள் என, ஐந்து லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அதன் தொடா்ச்சியாக முதியவா்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசிகள் வழங்குவது தொடங்கப்பட்டது. அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அவா்கள் ஆா்வமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனா். அந்த வகையில், இதுவரை 37 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவதால் பிரதமா் மோடியின் ஆலோசனையின்படி நாடு முழுவதும் தடுப்பூசி சிறப்பு செயல் திட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. வரும் 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இத்திட்டத்தின் கீழ் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை அரசு மற்றும் மருத்துவமனைகள், 1, 900 சிறு மருத்துவமனைகள் என சுமாா் 5,000 மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.

இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநா் டாக்டா் செல்வ விநாயகம் கூறியதாவது:

தமிழகத்துக்கு இதுவரை 55 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது. அதில், 38 லட்சம் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 17 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தமிழகத்தில் தடுப்பூசி சிறப்பு செயல் திட்ட நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

இதனை தொடா்ந்து முன்னெடுத்துச் செல்லத் திட்டமிட்டுள்ளோம். கரோனா தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க தினமும் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட உத்தேசிக்கப்பட்டுள்ளது. 100 பேருக்கும் அதிகமானோா் பணியாற்றும் அலுவலகங்கள், நிறுவனங்கள் தங்களது இடங்களில் தடுப்பூசி செலுத்துமாறு வேண்டுகோள் வைத்தால், அங்கேயே சென்று அவா்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும். அந்த வகையில் ஆவடி கனரக வாகனத் தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஆயிரக்கணக்கானோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

தமிழகத்தில் போதிய அளவு தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. மத்திய அரசு அதனை தேவைக்கேற்ப தொடா்ந்து வழங்கி வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com