காலதாமதமாகும்  முடிவு:  தேவை தேர்தல் சீர்திருத்தம்

தேர்தல் முடிவை தாமதமின்றி விரைந்து அறிவிப்பதற்கேற்ற வகையில், தேர்தல் சட்ட விதிகளில் உரிய திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
காலதாமதமாகும்  முடிவு:  தேவை தேர்தல் சீர்திருத்தம்



விழுப்புரம்: தேர்தல் முடிவை தாமதமின்றி விரைந்து அறிவிப்பதற்கேற்ற வகையில், தேர்தல் சட்ட விதிகளில் உரிய திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

தமிழகம், புதுவை, கேரளம், அஸ்ஸாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலை கடந்த பிப்.26-ஆம் தேதி மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, தமிழகம், புதுவை, கேரளத்தில் ஒரே கட்டமாக கடந்த 6-ஆம் தேதி தேர்தல் முடிவடைந்தது. அஸ்ஸாமில் 3 கட்டமாக (மார்ச் 27, ஏப். 1, ஏப். 6) தேர்தல் நிறைவடைந்தது. மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, இதுவரை 4 கட்டத் தேர்தல் முடிந்து ஏப்.17, 22, 26, 29 என இன்னும் 4 கட்டத் தேர்தல் நடைபெற வேண்டியுள்ளது.

5 மாநில பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும், முடிவுகளும் வருகிற மே 2-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன. மேற்குவங்கத் தேர்தல் முடிவுக்காக, பிற 4 மாநிலங்களும் 26 நாள்கள் காத்திருக்க நேரிட்டிருப்பது தேவையற்ற சர்ச்சைகள், விவாதங்களை உருவாக்கியுள்ளன.

தேர்தல் முடிவு அறிவிக்கும் வரை இந்த 4 மாநிலங்களிலும் காபந்து அரசு பதவியில் தொடர்ந்தாலும், எந்தவித முக்கிய முடிவுகளையும் மேற்கொள்ள முடியாத நிலை இருப்பதால், மக்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை, வழக்கத்துக்கு மாறாக, 6 மாதங்களுக்கு முன்பே பிரதான எதிர்க்கட்சியான திமுகவும், ஆளும் கட்சியான அதிமுகவும் போட்டி போட்டு தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கின. இதனால், ஜனவரி மாதம் முதலே மாநிலத்தில் வளர்ச்சி மீது ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் பெரிய அளவில் கவனம் செலுத்த முடியாமல், தேர்தலில் வெற்றி குறித்த சிந்தனையில் இருந்தன.

ஜனவரி மாதத்திலிருந்து மே முதல் வாரம் வரை கணக்கிட்டால், 4 மாதங்கள் மக்கள் பணியில் மிகப்பெரிய தொய்வு ஏற்படும் சூழல் உருவானது. அதுவும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிப்.26-க்குப் பிறகு, காபந்து அரசு பதவியில் இருப்பதால், கிட்டத்தட்ட 2 மாதங்கள் அரசு இயந்திரம் முற்றிலும் முடங்கியது. இதற்கு தேர்தல் ஆணையமே முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும்.

இதுகுறித்து கேட்டால், ஒரு மாநிலத் தேர்தலின் முடிவு, மற்றொரு மாநில மக்களின் மன ஓட்டத்தில் பாதிப்பை உருவாக்கி, அது தேர்தல் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பது தேர்தல் ஆணையத்தின் பதிலாக இருக்கும்.

மக்களவைத் தேர்தலில் வேண்டுமானால், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் முடிவை அறிவிப்பது சரியாக இருக்குமே தவிர, அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெறும் பேரவைத் தேர்தல்களில் இதுபோல மாதக்கணக்கில் காத்திருந்து முடிவை அறிவிக்கும்போது, மக்கள் பிரச்னைகள் பின்னுக்குத் தள்ளப்படும் என்பதை தேர்தல் ஆணையம் உணர வேண்டும்.

தென்மாநிலங்களான கேரளம், புதுவை, தமிழகத்தில் நடைபெறும் தேர்தலின் முடிவுகளை ஒரே நேரத்தில் அறிவிக்க வேண்டும் என்பது கூட ஒரு வகையில் சரியான முடிவாக இருக்கலாம். அண்டை மாநிலங்கள் என்பதால், ஒரு மாநிலத் தேர்தல் முடிவு மற்றொரு மாநிலத்தில் மக்களின் மன ஓட்டத்தைப் பாதித்து, தேர்தல் முடிவில் ஏற்ற, இறக்கங்களை ஏற்படுத்தலாம். ஆனால், தென்இந்தியாவின் கடைக்கோடி மாநிலங்களின் தேர்தல் முடிவு, பூகோள, சமூக, கலாசார ரீதியாக தொடர்பு இல்லாத, மேற்கு வங்கத்தில் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

வாக்குப் பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணும் மையங்களில் பூட்டி "சீல்' வைத்து மூன்றடுக்கு பாதுகாப்பு போட்டு, கரோனா காலத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள் ஒரு மாதமாக காத்திருப்பது சரியான நடைமுறையா என்பதை தேர்தல் ஆணையம் சிந்திக்க வேண்டும். இதுபோல காவல்துறையினரும், அதிகாரிகளும் ஒரு மாதமாக காத்திருப்பதால் மக்களின் வரிப்பணம்தான் வீணாகிறது.

1991 பேரவைத் தேர்தலில் 9 நாள்கள், 1996-இல் 11 நாள்கள், 2001-இல் 4 நாள்கள், 2006-இல் 5 நாள்கள், 2011-இல் 31 நாள்கள் தேர்தல் முடிவுக்காக காத்திருக்க வேண்டியிருந்தது.

இப்போதும், கடந்த 2011 தேர்தலைப் போல சுமார் ஒரு மாதம் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்தத் தேவையற்ற குழப்பத்துக்கு ஒரே தீர்வு, தேர்தல் முடிந்த ஓரிரு நாள்களில் முடிவை அறிவிப்பதுதான். அதற்கேற்ப தேர்தல் விதிகளில் திருத்தம் செய்வது மிகஅவசியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com