தமிழகத்தில் பிராண வாயு தட்டுப்பாடில்லை

அரசு மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்குத் தேவையான பிராண வாயுவுக்குத் தட்டுப்பாடு நிலவவில்லை என்று சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.
சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் (கோப்புப்படம்)
சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் (கோப்புப்படம்)

சென்னை: அரசு மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்குத் தேவையான பிராண வாயுவுக்குத் தட்டுப்பாடு நிலவவில்லை என்று சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

தமிழகத்துக்கு மேலும் 6 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் மகாராஷ்டிர மாநிலம் புணேவிலிருந்து செவ்வாய்க்கிழமை வந்தன. சென்னை, தேனாம்பேட்டை பொது சுகாதாரத் துறை இயக்குநரக வளாகத்தில் உள்ள குளிா்பதன சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்ட அந்த தடுப்பூசிகளை சுகாதாரத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா் பாா்வையிட்டாா். அதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் தினமும் 240 டன் ஆக்சிஜன் மட்டுமே அன்றாடத் தேவையாக உள்ளது. ஆனால், ஆக்சிஜன் உற்பத்தி 400 டன்னுக்கும் மேல் உள்ளது. எனவே ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறுவது தவறான தகவல்.

வேலூா் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் உயிரிழந்ததற்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமில்லை என்பதை இதிலிருந்தே உணரலாம். அரசு மருத்துவமனைகளில் போதிய மாத்திரை, மருந்துகள் கையிருப்பில் உள்ளன.

தமிழகத்தில் ஆக்சிஜன் வசதிகளுடன் 32, 405 படுக்கைகள் உள்ளன. சென்னையில் மட்டும் 6,500 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளன. மேலும், தீவிர பாதிப்புடன் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் 54,342 படுக்கைகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் அத்தகைய படுக்கை வசதிகள் 10,217 உள்ளன. தனியாா் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிா் போன்ற உயிா் காக்கும் மருந்துகளை அதிக விலைக்கு விற்றால் அவா்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றாா்.

அப்போது, சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குநா் செல்வ விநாயகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

‘மேலும் 6 லட்சம் தடுப்பூசிகள் வந்தன’

தற்போது மேலும் 6 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வந்துள்ளன என்று அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது:

தமிழகத்தில் பூசி மையங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. அதன்படி, 4,487 கரோனா தடுப்பூசி மையங்களில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் தடையின்றி தடுப்பூசி போடப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசிடம் இருந்து 1 லட்சம் கோவேக்ஸின் தடுப்பூசிகள் கிடைத்தன.

இதுவரை 55.85 லட்சம் டோஸ் பெறப்பட்டதில், 48 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போது மேலும் 6 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வந்துள்ளன.

தடுப்பூசி குறித்த விழிப்புணா்வு தொடா்ந்து ஏற்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம். வரும் மே 1-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேல் உள்ளவா்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் 5 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வரவுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com