புதிய கல்விக் கொள்கை தமிழில் இல்லை: வைகோ கண்டனம்

புதிய கல்விக் கொள்கை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படாததற்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளா் வைகோ
மதிமுக பொதுச்செயலாளா் வைகோ

புதிய கல்விக் கொள்கை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படாததற்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டுப் பள்ளிகளிலும், இந்தி, சமஸ்கிருதத்தைப் படித்தாக வேண்டும் என்ற புதிய  கல்விக் கொள்கை, தமிழுக்கு, தமிழருக்கு, தமிழ்நாட்டுக்கு எதிரானது என்பதால், அதைத் தமிழகம் முற்று முழுதாக ஒதுக்கித் தள்ள வேண்டும் என்பதை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தி வருகின்றது. திராவிட இயக்கங்கள் அனைத்தும் சேர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.  

அந்தப் புதிய கல்விக் கொள்கையை, முதலில், இந்தி, ஆங்கிலம் மொழிகளில் மட்டுமே வெளியிட்டனர். இன்று, குஜராத்தி, மராத்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு உட்பட 17 மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டு இருக்கின்றனர். நேபாலி மொழிபெயர்ப்பும் வெளியாகி இருக்கின்றது. ஆனால், தமிழில் வெளியிடவில்லை. காரணம், அந்தக் கல்விக் கொள்கையின் உள்ளடக்கம், தமிழர்களுக்குத் தெரியக்கூடாது; தெரிந்தால் எதிர்ப்புகள்  கிளம்பும்; அந்த எதிர்ப்பு இந்தியா முழுமையும் பரவும் என்ற நோக்கத்துடன், திட்டமிட்டு தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிடவில்லை.

தமிழ் மொழியின் சிறப்பு, பெருமை என மேடைகளில் முழங்குகின்ற நரேந்திர மோடி அரசின் உள்நோக்கம், வெளிப்பட்டு விட்டது. இந்தியாவில் ஏழரைக் கோடி மக்கள் பேசுகின்ற தமிழ் மொழியை, கால வரையறை வகுக்க முடியாத செம்மொழியாம் தமிழைப் புறக்கணித்த நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசின் போக்கிற்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com