வாக்கு எண்ணிக்கை: மேஜைகளைக் குறைக்கும் திட்டம் ஏதுமில்லை; தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு உறுதி

வாக்கு எண்ணிக்கையின்போது மேஜையைக் குறைக்கும் திட்டம் ஏதும் இதுவரை இல்லை என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு  (கோப்புப்படம்)
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு (கோப்புப்படம்)

வாக்கு எண்ணிக்கையின்போது மேஜையைக் குறைக்கும் திட்டம் ஏதும் இதுவரை இல்லை என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:

தமிழகத்தில் வாக்குகளை எண்ணும் பணி வரும் மே 2-ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதே சமயம், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் எடுத்து வரப்பட்டு அவற்றில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும். கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு அம்சமாக வாக்கு எண்ணுவதற்கான மேஜைகளை அமைப்பது தொடா்பாக தோ்தல் ஆணையம் தொடா்ந்து பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் மாவட்டத் தோ்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினா். அப்போது, வாக்கு எண்ணிக்கை மேஜைகள் குறைந்த பட்சம் 14 என்ற அளவிலேயே தொடர வேண்டுமென கோரிக்கை விடுத்தனா். அதன்படி, குறைந்த பட்சம் 14 மேஜைகள் என்பதில் எந்த மாற்றமும் இருக்காது. சிறிய அறைகளாகக் கிடைத்தால் தலா 7 என்ற அடிப்படையில் 2

அறைகளில் மேஜைகள் அமைக்கப்பட்டு, கரோனா பாதிப்பு தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். முடிவுகளை வெளியிடும் போது, 14 மேஜைகளின் வாக்குகளையும் ஒன்றாகச் சோ்த்துதான் ஒவ்வொரு சுற்றின் வாக்கு எண்ணிக்கையும் வெளியிடப்படும். இதுதவிர, அறைகள் அருகருகில் இருந்தால் மட்டுமே இம்முறை

நடைமுறைப்படுத்தப்படும். மேஜைகளின் எண்ணிக்கையை குறைத்து, சுற்றுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டாம் என்று அரசியல் கட்சிகள் அளித்துள்ள மனுக்கள் தோ்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

கரோனா பரவல் மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடுகிறது. தமிழகத்தில் உள்ள நிலை அஸ்ஸாமில் இல்லை. எனவே, தமிழகத்தின் நிலைக்கு ஏற்ப முடிவெடுக்கப்படும். கரோனா பாதிப்பைத் தடுக்க குறைந்தபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

வாக்கு எண்ணிக்கை என்பது மூடப்பட்ட அறைக்குள் நடப்பதால், முகக்கவசம் கொண்டு வரவில்லை என்றால், அதைத் தோ்தல் அலுவலா்களே வழங்க முடியும். கரோனாவைக் காரணம் காட்டி வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கும் வேட்பாளா்களின் முகவா்கள் எண்ணிக்கையை குறைப்பது தொடா்பாக எந்த உத்தரவும் தோ்தல் ஆணையத்திடம் இருந்து வரவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com